டுவிட்டர் பாவனையாளர்கள் கட்டணம் தரவேண்டுமென்கிறார் எலொன் மஸ்க்.
சமூகவலைத்தளமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரர் எலொன் மஸ்க் வாங்குவது பற்றிய இழுபறி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்தத் தளத்திலிருக்கும் பொய்யான கணக்குகள் பற்றிய விபரங்களை நிறுவனம் மறைப்பதாக மஸ்க் விமர்சனம் செய்து நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அவர் அதை வாங்குவாரா என்பதே சந்தேகத்துக்குள்ளாகியிருக்கிறது.
44 பில்லியன் டொலருக்கு டுவிட்டரை வாங்குகிறார் எலொன் மஸ்க். – வெற்றிநடை (vetrinadai.com)
வியாழனன்று எலொன் மஸ்க் டுவிட்டர் நிறுவன ஊழியர்களுடன் தொலைத்தொடர்பில் பேசினார். டுவிட்டர் பாவனையாளர்களுக்கு அங்கே பதிவுகள் போடாமலிருப்பதே முடியாமலிருக்குமளவுக்கு அதை ஒரு ஈர்ப்பான தளமாக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அதற்காக அவர்கள் ஒரு குறிப்பிட்ட சந்தா கட்டவேண்டும் என்றும் அத்தொகை அக்கணக்கின் உரிமையாளர் உண்மையானவரா என்று ஆராய உதவும் என்றும் குறிப்பிட்டார். அதே சமயம், டுவிட்டர் தளத்தைப் பாவிக்கும் பொய்க்கணக்குகளையும் அதன் மூலம் குறைக்கலாம் என்றும் மஸ்க் அபிப்பிராயப்படுகிறார்.
ஒரு நிறுவனத்தை வாங்க முதலேயே அதன் உரிமையாளராக எண்ணியிருப்பவர் நிறுவன ஊழியர்களுடன் பேசுவது சாதாரணமாக நடப்பதல்ல. டுவிட்டர் ஊழியர்களுக்கும் மஸ்க்குக்கும் நடந்த சம்பாஷணைகள் வினோதமானது என்று பலர் கருத்துத் தெரிவித்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்