பிரிட்டன் மூன்று தசாப்தங்களில் காணாத மிகப் பெரிய ரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஆரம்பம்.
பிரிட்டனின் தொழிலாளர் சங்கமான RMT தமது 50,000 அங்கத்துவர்களை மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்துகிறது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலையுயர்வுகளால் தமது ஊதியத்தில் பெரும் இழப்பைப் பெற்றிருக்கும் தொழிலாளர்களின் மனக்கசப்பே இந்த நடவடிக்கைக்குக் காரணமாகும்.
நாற்பது வருடங்களாக பிரிட்டன் காணாத அளவுக்குப் பணவீக்கத்தை உக்ரேன் – ரஷ்யப் போரால் ஏற்பட்டிருக்கும் விலையுயர்வுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. அதனால் தொழிலாளர்கள் நேர்கொள்ளும் ஊதிய இழப்பை ஈடுசெய்ய அரசு எதுவும் செய்யவில்லை என்பதே தொழில் சங்கத்தின் முக்கிய குற்றச்சாட்டாகும். செவ்வாய் – வியாழன் வரை இந்த வேலை நிறுத்தங்கள் நடைபெறவிருக்கின்றன. லண்டன் நிலக்கீழ் ரயில் சேவைத் தொழிலாளர்களும் செவ்வாய்க்கிழமையன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவிருக்கிறார்கள்.
ஸ்தம்பிக்கவிருக்கும் போக்குவரத்தால் நடக்கவிருக்கும் பரீட்சைகளில் பங்குபற்றவிருக்கும் பல்லாயிரக்கணக்கான இளவயதினர் பாதிக்கப்படுவார்கள் என்று பாடசாலைகளின் நிர்வாகங்கள் எச்சரித்திருக்கின்றன. கொரோனாத்தொற்றுக் காலத்தின் பின்னர் பொருளாதாரம் ஒழுங்காகச் சீர்செய்யப்பட முன்னர் ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமையால் பலர் வேலைவாய்ப்புக்களையும் இழக்கலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
சுமார் ஒரு வாரத்துக்கு முன்னரே இந்த வேலை நிறுத்தம் உண்டாகலாம் என்று ரயில் நிர்வாகிகள் சார்பில் எச்சரிக்கப்பட்டது. தகுந்த நேரத்தில், வேகத்தில் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வை அடையத் தவறியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. சனியன்று நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறாமல் போகத் தொழிலாளர் சங்கத்தினர் அதைத் தொடரும் நடவடிக்கைகளை எடுக்காமல் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பதற்கு எதிராகக் கொடி தூக்கிப் போராட்டங்கள் நடத்தி வருவதாகப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் கிராண்ட் ஷப்ஸ் குற்றஞ்சாட்டுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்