மியான்மாருக்குத் திருப்பியனுப்பும்படி கோரி பங்களாதேஷில் ரோஹின்யா அகதிகள் போராட்டம்.
பங்களாதேஷில் அகதிகளாக வாழ்ந்து வரும் ரோஹின்யா இன மக்கள் அங்கே தமது வாழும் நிலை நரகத்தை விட மோசமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். சர்வதேச அகதிகள் தினமான ஜூன் 20 ஐக் குறிப்பிட்டுத் தமது எதிர்ப்புக் குரலை சனி, ஞாயிறு தினங்களில் ஊர்வலமாகச் சென்று அவர்கள் வெளியிட்டார்கள். அவர்களுக்கு ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தும் அனுமதி 2019 லேயே நிறுத்தப்பட்டதையும் மீறி ஒன்றுகூடிய அவர்கள், “எங்களை மியான்மாருக்கே திருப்பியனுப்பு,” என்று கோருகிறார்கள்.
ரோஹின்யா அகதிகள் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பங்களாதேஷின் வெவ்வேறு அகதிகள் முகாம்களில் வாழ்கிறார்கள். மூங்கிலால் செய்யப்பட்ட அந்தக் கூடாரங்களில் வாழும் அவர்களுடைய சுகாதார வசதிகள் மிகவும் மோசமானவை. அவர்களுக்கு வேலைகள் கிடைப்பதில்லை, அடிப்படைப் பொருளாதார வசதிகளும் கிடைப்பதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை, “எங்களுக்கு இந்த அபல வாழ்க்கை போதும், திருப்பியனுப்புங்கள்,” என்று கொடிகளைப் பிடித்துக் கோஷமிட்டதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு மியான்மாரில் வாழும் உரிமைகளும், பாதுகாப்பும் கொடுக்க அந்த நாட்டின் அரசு இதுவரை சம்மதிக்காததால் அவர்களை நாட்டுக்கு அனுப்பும் முயற்சிகள் இதுவரை வெற்றிபெறவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்