வெளிச்சத்திற்கு வெளியே

கருப்புத் திரையிட்ட
கண்ணாடிக் கூண்டுக்குள்
கருத்த கண்ணாடிக்குள்
மங்கிய வெளிச்சத்தைத்
தனக்காக மட்டுமே
பாய்ச்சிக் கொண்டிருந்தது
அந்த விளக்கு!

கண்ணாடியைத் துடைத்து
திரியைத் தூண்டினால்
அறைக்கு மட்டுமல்ல
வெளியிலும் கிடைக்கும்
வெளிச்சமென் றெண்ணி
கதவைத் திறந்தேன்.
தானாகச் சாத்திக்கொள்ளும்
கதவு தலையில் சாத்தியது!

தடுமாறி உள்ளே புகுந்தேன்
விளக்கிடம் சென்றேன்
கருத்துக் கிடந்த
கண்ணாடியைக்
கையிலெடுத்தேன்.
அறையெங்கும் வெளிச்சம்.
அனையும் நோக்கில்
ஆடியது நெருப்பு.

உடுத்திய வேட்டியின்
ஒருபகுதியை விரலில்சுற்றி
கண்ணாடிக்குள் உள்நுழைத்து
துடைக்கத் தொடங்கினேன்
கையைக் கீறியது
கண்ணடித் துண்டு
கொட்டிய குருதியில்
வலித்தது நெஞ்சு.

கருக்கேறிய திரியில்
கருக்கினை நீக்க
எரியும் நெருப்புக்குள்
விரலை நுழைத்துத்
திரியை நசுக்கி
மாசு நீக்கீனேன்.
நல்லது செய்கிறான்
நமக்கென உணராத
விளக்கு கையைச்
சுட்டு மகிழ்ந்தது.

துடைத்த கண்ணாடியை
விளக்கில் பொருத்தினேன்
ஆட்டத்தை நிறுத்தி
அழகாய் நிமிர்ந்து
ஒளிர்ந்தது விளக்கு
அறையெங்கும் வெளிச்சம்
அறைக்கு வெளியேயும்…

கையில் கீறல்…
நெருப்பின் தீண்டல்…
விரலிலும் வேட்டியிலும்
புகையும், கருக்கும்.
ஆனாலும் மகிழ்ச்சி.
உதவும் உள்ளங்களுக்கு
எப்போதும் உண்டு
இதுபோன்ற பரிசுகள்!

எழுதுவது : ச.ந.இளங்குமரன்,
தேனி நாகலாபுரம்
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *