வியாழனன்று ரஷ்யாவிடமிருந்து எரிவாயு மீண்டும் கிடைக்குமா என்று மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கிறது ஜேர்மனி.
ரஷ்யாவின் எரிவாயு ஜேர்மனிக்கு அனுப்பப்படும் குளாய்களின் [Nord Stream 1] வருடாந்திர பராமரிப்பு வேலைகள் முடிந்து வியாழனன்று அவை மூலம் மீண்டும் தமக்கு எரிவாயு கிடைக்குமா என்ற கேள்விக்குறியுடன் காத்திருக்கிறது ஜேர்மனி. ஏறிவரும் எரிவாயு விலையால் தனது கஜானாவை நிரப்பிக்கொண்டிருக்கும் ரஷ்யா மீண்டும் அக்குளாயைத் திறந்துவிடும்போது முன்னரைப் போல ஜேர்மனிக்குத் தினசரி 160 மில்லியன் கி. மீற்றர் எரிவாயு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட பராமரிப்பு வேலையின்போது அக்குளாய்க்குத் தேவையான பகுதியொன்று கனடாவிலிருந்து வரவழைக்கப்பட்டது. நிலவும் ரஷ்ய – முடக்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டுக் கனடா அதை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ததை உக்ரேன் கண்டித்தது. ஐரோப்பிய நாடுகளால் அந்த முடிவு பெருமளவு வரவேற்கப்பட்டது.
பராமரிப்பு வேலை என்று குறிப்பிடப்படும் ரஷ்யாவின் நகர்வு ஒரு அரசியல் நடவடிக்கையாக இருக்கலாம். ரஷ்யா அக்குளாய்களில் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி முற்றாகவே அவற்றைப் பூட்டிவிடலாம் என்று அவை மூடப்பட்டபோது ஜெர்மனியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வரவிருக்கும் குளிர்காலத்தை எண்ணித் தனது எரிவாயுக் கையிருப்பை முடிந்தளவு நிறைத்துக்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிக்கின்றன.
ஜேர்மனி தவிர, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் ரஷ்யா தனது எரிவாயு ஏற்றுமதியைக் கணிசமாகக் குறைத்திருக்கிறது. சில நாடுகளுக்கு அவை முற்றாக நிறுத்தப்பட்டு விட்டன. ரஷ்யா முற்றாகவே அக்குளாய்களை மூடிவிடுமானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே கணிக்கப்பட்ட அளவை விட மேலும் குறுகும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்