பழங்குடிப் பெண்ணை ஜனாதிபதியாக்கினார்கள், எழுதுகோலைப் பாவிக்கவும் அவரை அனுமதிப்பார்களா?
எதிர்பார்த்தது போலவே இந்தியாவின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வகிக்கும் பா.ஜ.க வினால் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட திரௌபதி முர்மு வியாழனன்று நடந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். அவர் இந்தியாவின் இரண்டாவது பெண் ஜனாதிபதியும், சுதந்திரத்துக்குப் பின்னர் பிறந்தவர்களில் முதலாவது இந்திய ஜனாதிபதியும், பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினரைச் சேர்ந்த முதலாவது பெண் ஜனாதிபதியும் ஆகும்.
“பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரான திரௌபதி முர்முவை ஜனாதிபதியாக்கியதன் மூலம் இந்தியா சரித்திரம் படைத்திருக்கிறது. அவருடைய சேவை அடித்தட்டு மக்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒரு ஒளிக்கீற்றாக அமைந்திருக்கிறது,” என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
முர்முவுக்கு எதிராக அப்பதவிக்குப் போட்டியிட்ட முன்னாள் பா.ஜ.க அமைச்சரான யஷ்வந்த் சின்ஹாவும் வெற்றிபெற்ற முர்முவை வாழ்த்தியிருக்கிறார். தான் பிறந்த ஒடிஸ்சா மாநிலத்தில் அமைச்சர் பதவிகளை வகித்த முர்மு, ஜார்கந்த் மாநிலக் கவர்னராகவும் இருந்திருக்கிறார்.
“எங்கோ இருக்கும் ஒரு சிறு கிராமத்திலிருந்து வந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த நான் இந்தியாவின் அதியுயர் கௌரவப் பதவிக்கு வருவேன் என்று நினைத்திருக்கவில்லை,” என்று முர்மு தெரிவித்தார்.
“எமது சமூகத்தினர் 1990 களிலிருந்தே எங்களுடைய உரிமைகளுக்காகப் போராடி வருகிறோம். எம்மினத்தவர் ஒருவரை ஜனாதிபதியாக்க பா.ஜ.க-வுக்கு என்ன காரணம் இருந்ததோ தெரியாது. ஆனால், அப்பதவியிலிருக்கும் அவர் தனது எழுதுகோலைப் பாவித்து முடிவுகளை எடுக்க அனுமதிப்பார்களோ தெரியாது,” என்று முர்முவின் ஜனாதிபதி நியமனம் பற்றித் தெரிவித்தார் அந்த இனத்தின் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தயாமணி பார்லா.
சாள்ஸ் ஜெ. போமன்