ஞாயிறன்று கனடாவுக்குத் விமோசனம் வேண்டி யாத்திரை செய்யவிருப்பதாகப் பாப்பாண்டவர் தெரிவித்தார்.
பாப்பாண்டவர் பிரான்சிஸ் ஞாயிறன்று தனது 37 வது சர்வதேச விஜயத்தை ஆரம்பிக்கவிருக்கிறார். ஆறு நாட்கள் நடக்கவிருக்கும் அந்த விஜயத்தை, “பாவவிமோசனம் வேண்டி யாத்திரை” என்று அவர் குறிப்பிடுகிறார். கனடிய பழங்குடியினரின் குழந்தைகளைக் கத்தோலிக்க குருமார் தமது பாலியல் இச்சைகளுக்குப் பாவித்தது, நூற்றுக்கணக்கான பாலர்களின் இறப்புக்களை மறைத்தது ஆகியவற்றுக்காக அவர் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவிருக்கிறார்.
கடந்த வருடம் கனடாவின் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் ஆயிரத்துக்க்கும் அதிகமான பெயர் பொறிக்கப்படாத மயான இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கத்தோலிக்க திருச்சபையால் அப்பழங்குடியினருக்கு நடாத்தப்பட்ட பாடசாலைகளை அடுத்தே அம்மயானங்கள் இருந்தன. அவை கத்தோலிக்க திருச்சபை அந்த மக்களுக்கு இழைத்த கொடுமைகளை உலகுக்கு வெளிப்படுத்தின.
திங்களன்று கனடாவின் Maskwacis நகரில் தனது சுற்றுப்பயணத்தை பாப்பரசர் ஆரம்பிப்பார். அந்த நகரத்தில் கத்தோலிக்க திருச்சபையின் மிகப்பெரும் பாடசாலையொன்று இருந்தது. அங்கே சுமார் 15,000 பேர் முன்னர் அவர் உரை நிகழ்த்துவார். அவர்களில் அப்பாடசாலைகளின் முன்னாள் மாணவர்களும் அடங்குவர்.
செவ்வாயன்று அவர் எட்மொண்டன் நகரில் 60,000 பேர் பங்குகொள்ளக்கூடிய அரங்கொன்றில் பொதுச்சேவை ஒன்றை பாப்பரசர் நடத்துவார். வெவ்வேறு நகரங்களுக்கும் தொடரும் தனது யாத்திரையில் அவர் பிரதமர் ஜஸ்டின் டுருடுவையும் சந்திப்பார்.
பாப்பரசரின் மன்னிப்புக் கோரும் விஜயம் பற்றி ஆதரவானவையும், விமர்சனங்களுமான கருத்துக்கள் பழங்குடியினரால் தெரிவிக்கப்படுகின்றன. அவர்களிடம் அன்று கத்தோலிக்க திருச்சபை எடுத்துக்கொண்ட பாரம்பரியப் பின்னணியுள்ள கலைப்பொருட்கள் தொடர்ந்தும் வத்திக்கான் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பழங்குடியினரிடம் திருப்பிக்கொடுக்கும் அறிவிப்பைப் பாப்பரசர் வெளியிடுவாரா என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்