சீனாவின் “Yuan Wang 5” அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருவது பற்றி இந்தியாவின் விசனம்.
ஆகஸ்ட் 11 ம் திகதியன்று சிறீலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வரவிருக்கிறது சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான “Yuan Wang 5”. சர்வதேசக் கப்பல் கண்காணிப்பு விபரங்களிலிருந்து அதைத் தெரிந்துகொண்ட இந்தியா தனது அதிருப்தியையும் விசனத்தையும் தெரிவித்திருக்கிறது. தனது ஆராய்ச்சிக் கப்பல்கள் மூலம் சீனா கடல்வளம் சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டுமன்றி உளவுக்கும் பயன்படுத்துவதாலேயே இந்தியாவின் கொல்லைக்குள்ளிருக்கும் சிறீலங்காவுக்கு அக்கப்பல் வருவது பற்றிய சந்தேகத்தை இந்தியா எழுப்பியிருக்கிறது.
அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் சிறீலங்காவுக்குக் கடன் கொடுத்து அதன் மூலமாக நாட்டின் வளங்களைக் கைப்பற்றிப் பொருளாதாரத்தின் மீதும் தன் பலமான கொடுக்கால் இறுக்கியிருக்கும் நாடுகளில் சீனா முதன்மையானது. நாட்டின் ஆட்சியிலிருந்த ராஜபக்சே குடும்பத்தினரின் மூலமாக அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டப்பட்டது. அதை இயக்க வழியின்றி, அதன் மீதான கடனையோ, அதன் வட்டியையோ கட்டும் நிலையும் இழந்த சிறீலங்கா அரசு அந்தத் துறைமுகத்தைச் சீனாவுக்கு 99 வருடக் குத்தகைக்குக் கொடுக்க வேண்டியதாயிற்று.
சிறீலங்காவுக்குக் கடங்களைக் கொடுத்த மேலுமொரு நாடு இந்தியா. தனது அதிகாரப் பிராந்தியத்துக்குள் மூக்கை நுழைத்துவரும் சீனாவின் நகர்வுகளைக் கண்காணித்து வருகிறது இந்தியா. சமீபத்தில் சர்வதேசத்தில் வாங்கிய கடன்களைக் கொடுக்காததால் நாட்டின் பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது சிறீலங்கா. எரிபொருட்கள், அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்யக் கையில் அன்னியச் செலாவணியின்றித் தவிக்கிறது சிறீலங்கா. அச்சமயத்தில் பெரும்பாலான உதவிகளைச் செய்தும் கடன் கொடுத்தும் வருகிறது இந்தியா.
2014 இல் சீனாவின் போர்க்கப்பல், நீர்மூழ்கிக்கப்பல் ஆகியவற்றைக் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதித்தது சிறீலங்கா. அச்சமயத்திலேயே இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்தது. தற்போது, சிறீலங்காவிடம் தனது காட்டமான அதிருப்தியை மீண்டும் தெரிவித்திருக்கிறது இந்தியா. தனது நவீன கப்பல் சிறீலங்காவுக்கு வருவது பற்றி எவ்வித கருத்தையும் தெரிவிக்க மறுத்து வருகிறது சீனா.
உஸ்பெக்கிஸ்தான் தலைநகரில் நடக்கும் ஷங்காய் கூட்டுறவு மாநாட்டில் ரஷ்யா, பாகிஸ்தான், மத்திய ஆசிய நாடுகளுடன் சீனாவும் இந்தியாவும் சந்திக்கின்றன. அங்கே கட்டுப்பாட்டுடன் பங்குபற்ற சிறீலங்காவுக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது. அச்சமயம் சீனாவின் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்ட கப்பல் பற்றிப் பேசுவாரா என்பதைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க இந்திய வெளிவிவகார அமைச்சரகம் மறுத்துவிட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்