ரஷ்யா 55 பில்லியன் டொலர் முதலீடு செய்து சீனாவுடன் எரிவாயுக் குளாய்த் தொடர்பு.
பெரிதளவில் தனது தயாரிப்புக்களுக்கு இதுவரை படிம எரிபொருட்களில் தங்கியிருக்கும் சீனா இயற்கை எரிவாயுவின் பாவனையை அதிகரிக்கவிருக்கிறது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்தும் கண்டிக்க மறுக்கும் சீனாவுக்குத் தனது எரிவாயு விற்பனையை அதிகரிப்பதன் மூலம் ரஷ்யா தான் ஐரோப்பாவில் இழந்துவரும் விற்பனையை ஈடுகட்டலாம். சீனாவுடன் நிறுவப்படும் எரிவாயுக் குளாய்களுக்காக ரஷ்யா இதுவரை 55 பில்லியன் டொலரளவு முதலீடுகளைச் செய்திருக்கிறது.
சீனாவைப் பொறுத்தவரை ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்குவது அதன் பல எரிபொருள் கொள்வனவு வசதிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. சுமார் 1.6 பில்லியன் டொலர் பெறுமதியான ரஷ்ய எரிவாயுவைக் கொள்வனவு செய்த சீனா 2019 இன் பின்னர் அதை 3.81 ஆக அதிகரித்திருக்கிறது. அதே சமயத்தில் துருக்மேனிஸ்தானிலிருந்து சீனா வாங்கும் எரிவாயு 52 விகிதத்தால் அதிகரித்து 4.52 பில்லியன் டொலர் ஆகியிருக்கிறது.
முன்னாள் சோவியத் யூனியனின் அங்கத்துவர்களில்லாத நாடுகளுக்கு ரஷ்யா ஏற்றுமதி செய்யும் எரிவாயுவின் பெறுமதி இவ்வருட ஆரம்பத்திலிருந்து 31 % ஆல் வீழ்ச்சியடைந்து சுமார் 69 பில்லியன் டொலர்கள் பெறுமதியானதாக இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்