ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணிகளாக நுழைய ரஷ்யர்களை அனுமதிக்கலாகாது என்று எஸ்தோனியாவும், பின்லாந்தும் கோரின.

தனது பக்கத்து நாடான உக்ரேனைத் தாக்கிப் போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவின் குடிமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுற்றுப்பயணத்துக்காக விசாக்கக் கொடுப்பதை நிறுத்தவேண்டுமென்று பின்லாந்தும், எஸ்தோனியாவும் அறைகூவியிருக்கின்றன. அந்த வேண்டுகோளை இவ்வார ஆரம்பத்தில் உக்ரேனிய ஜனாதிபதி செலின்ஸ்கி ஐரோப்பிய நாடுகளிடம் முன்வைத்திருந்தார்.

“ஐரோப்பிய நாடுகளுக்குள் சுற்றுப்பயணம் செய்வதற்கு ஒருவர் சலுகைபெற்றிருக்க வேண்டும். அது ஒரு மனித உரிமையல்ல,” என்று எஸ்தோனியப் பிரதமர் காயா கல்லாஸ் குறிப்பிட்டு, ரஷ்யர்களுக்கு அவ்வுரிமையை மறுக்கவேண்டுமென்று கோரியிருந்தார். “ஐரோப்பிய மக்களைத் தமது மிருகத்தனமான போரால் கடும் பிரச்சினைகளுக்கு உள்ளாக்கியிருக்கும் ரஷ்யாவின் குடிமக்கள் எதுவுமே நடக்காததுபோலச் சுற்றுப்பயணம் செய்ய அனுமதிக்கலாகாது,” என்று பின்லாந்தின் பிரதமர் சன்னா மரீன் குறிப்பிட்டிருக்கிறார். பின்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் சில நாட்களுக்கு முன்னர் “ரஷ்யர்களுக்குச் சுற்றுலா விசா கொடுப்பதை மட்டுப்படுத்தவேண்டும்,” என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

ரஷ்யாவுடன் நிலப்பிராந்தியத்தால் தொடர்புள்ள எஸ்தோனியாவும், பின்லாந்தும் ரஷ்யாவிலிருந்து வரும் விமானங்களை ஏற்கனவே நிறுத்திவிட்டன. அதையடுத்து மார்ச் மாதத்தில் பின்லாந்துக்கு வரும் அதிவேக ரஷ்ய ரயில்சேவையும் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆயினும், வேறு நாடுகள் மூலமாக ரஷ்யர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் சுற்றுலாப் பயணிகளாக நுழையலாம். 

ஐரோப்பிய ஒன்றிய நாடான லத்வியா ஏற்கனவே ரஷ்யர்களுக்குச் சுற்றுலா விசா கொடுப்பதை நிறுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய விசாவான ஷங்கன் பிராந்திய விசாவைப் பெறுகிறவர்கள் சகல ஒன்றிய நாடுகளுக்குள்ளும் பிரயாணிக்கலாம். இம்மாத இறுதியில் செக் குடியரசில் நடைபெறவிருக்கும் ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாட்டில் ரஷ்யர்களுக்கான சுற்றுலா விசா வழங்குதல் பற்றி விவாதிக்கப்படும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *