போர்டோ, பிரான்சில் 30 கி.மீ பிராந்திய காட்டுத்தீயை அணைக்க ஐரோப்பிய நாடுகள் உதவுகின்றன.
தனது நாட்டில் எரியும் காட்டுத்தீக்களை அணைக்க உதவிவரும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரான்சின் ஜனாதிபதி மக்ரோன் நன்றி செலுத்தியிருக்கிறார். Bordeaux நகருக்கு வெளியே சுமார் 30 கி.மீ பிராந்தியத்தில் மோசமான காட்டுத்தீ உண்டாகியிருப்பதால் 1,000 க்கும் அதிகமான தீயணைப்புப்படை வீரர்கள் அதை அணைக்கும் முயற்சியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
7,400 ஹெக்டேர் பகுதி ஏற்கனவே எரிந்து அழிந்திருக்கிறது. அதையடுத்து வாழும் சுமார் 10,000 பேர் அங்கிருந்து வெவ்வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான தீயணைப்புப்படை வீரர்களின் இடைவிடாத முயற்சியையும் மீறித் தீ பரவிக்கொண்டிருக்கிறது. கடுமையான வரட்சியும், வேகமாக அடிக்கும் காற்றும் தீயணைக்கும் முயற்சிகளுக்குச் சவாலாகியிருக்கிறது. கட்டுப்பாட்டுக்குள் காட்டுத்தீயைக் கொண்டுவர மேலும் காலமெடுக்கும் என்று படையினர் தெரிவிக்கிறார்கள்.
ஜேர்மனி, போலந்து, ருமேனியா, கிரீஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகள் பிரான்சுக்கு உதவுவதற்காகத் தமது தீயணைப்புப்படை வீரர்கள், விமானங்களை அனுப்பிவைத்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்