உளவுபார்த்தல் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக டிரம்ப் மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வீட்டில் புலன் விசாரணை அதிகாரிகள் நடாத்திய சோதனைகள் பற்றிய விபரங்கள் பற்றிய ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன. அப்பத்திரங்கள் டொனால்ட் டிரம்ப் கையிலிருந்தும் அவற்றை அவர் பகிரங்கப்படுத்தாமலிருந்தார். அத்துடன் தன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அரசியல் துன்புறுத்தலே என்றும் குறிப்பிட்டு நீதியமைச்சே அவர்களிடமிருக்கும் பத்திரங்களின் விபரங்களை வெளிப்படுத்தலாம் என்றும் அறைகூவியிருந்தார்.
“இரகசியமானவை,” என்று அமெரிக்க அரசால் குறிப்பிடப்பட்ட 11 பத்திரங்கள் டிரம்ப்பின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாகப் புலன் விசாரணை நீதிபதியின் பத்திரங்கள் குறிப்பிடுகின்றன. அரச ஆவணப் பெட்டகத்திலிருக்கவேண்டிய அவற்றை டிரம்ப் தனது உடமையாக்கி, பாவித்துப் பரவியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு டிரம்ப் மீது எழுப்பப்பட்டிருக்கிறது. “அதி இரகசியமானவை,” என்று குறிப்பிடப்படும் அப்பத்திரங்களை அரசின் ஆவணப்பிரிவினர் கேட்டுக்கொண்டும் இதுவரை டிரம்ப் திருப்பிக் கொடுக்கவில்லை என்கிறார்கள் நீதியமைச்சின் அதிகாரிகள்.
தன் வீட்டிலிருக்கும் ஆவணங்களின் “இரகசியமானவை” என்ற தன்மையை, தான் பதவியிலிருக்கும்போது மாற்றிவிட்டதாகவும் அவற்றைக் கைப்பற்றவேண்டிய அவசியமில்லை, கேட்டிருப்பின் தானே திருப்பிக் கொடுத்திருக்கலாம் என்கிறார் டிரம்ப். நீதியமைச்சர் மெரிக் கார்லண்ட் கூற்றுப்படி குறிப்பிட்ட பத்திரங்கள் “இரகசியமானவை” என்றே தொடர்ந்தும் இருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்