வெப்ப அலையின் தாக்குதலால் பிரிட்டனில் உருவாகியிருக்கும் “பொய்யான இலையுதிர்காலம்.”
சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க வரட்சியால் ஐரோப்பிய நாடுகள் தாக்கப்பட்டிருப்பது தெரிந்ததே. ஐக்கிய ராச்சியமும் அதற்கு விதிவிலக்கல்ல. கடும் வெப்பநிலையால் நீர் நிலைகள் வரண்டுபோயிருப்பது மட்டுமன்றி மரங்களிலிருக்கும் இலைகளும் பழுத்துக் காய்ந்து விழுந்து இலையுதிர் காலம் போன்ற பிரமையை உண்டாகியிருக்கிறது.
வரண்ட காலநிலையால் பாதிக்கப்பட்டு மரங்கள் தம்மிடமிருக்கும் ஈரத்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள தமது இலைகளை உதிர்த்துக்கொள்வதை, “பொய்யான இலையுதிர்காலம்” “false autumn” என்கிறார்கள் தாவரவியலாளர்கள். அது அந்தத் தாவரங்கள் தமது உயிரைக் காத்துக்கொள்ளச் செய்யும் நடவடிக்கையாகும். வயதான மரங்கள் ஆழமான வேர்களைக் கொண்டிருப்பதால் தம்மைக் காத்துக்கொள்ளும். அதிக வயதற்ற மரங்கள் இத்தகைய வெப்பநிலையைத் தாங்கி வாழ்வது கடினமானது.
இந்தக் கோடையின் ஆரம்பத்திலிருந்தே பிரிட்டனின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலையை அனுபவித்து வருகின்றன. இதுபோன்ற அளவான வெம்மையை அங்கே காண்பது இதுவே முதல் தடவையாகும். ஓரிரண்டு வருடங்களுக்கு இது தொடர்வதைத் தாவரங்களால் தாங்க முடியலாம். ஆனால், இந்த நிலை மேலும் பல வருடங்களுக்குத் தொடருமானால் அப்பிராந்தியத்தில் காணப்படும் தாவரங்கள் பல அழிந்து போகக்கூடும். அத்தாவரங்களில் தங்கியிருக்கும் விலங்கினங்களும் அதேபோல அழிவைச் சந்திக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்