மாதவிலக்குக்காலத்துக்கான சகல பொருட்களும் இலவசமாக வழங்கும் முதல் நாடாகியது ஸ்கொட்லாந்து.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்கொட்லாந்துப் பாராளுமன்றம் எடுத்த முடிவின்படி பெண்கள் மாதவிலக்குக் காலத்தில் பாவிப்பதற்கான உதவிப் பொருட்கள் சகலமும் இலவசமாகின்றது. இந்த நடவடிக்கையை எடுத்திருக்கும் உலகின் முதலாவது நாடு ஸ்கொட்லாந்து ஆகும். இப்பொருட்கள் மருந்துக் கடைகளிலும், சமூக மையங்களிலும் தேவையானவர்களுக்குக் கிடைக்கும்.
“பணவீக்கத்தால் பொதுவாகவே பொருட்களின் விலைகள் உயர்ந்திருக்கும் இந்தச் சமயத்தில் பொருளாதார வித்தியாசமில்லாமல் சகலருக்கும் மாதவிலக்குக்காலப் பொருட்களைக் கிடைக்கச்செய்வது மிகவும் அவசியமானது,” என்று நாட்டின் நீதியமைச்சர் ஷோனா ரொபின்சன் கருத்துத் தெரிவித்தார்.
ஸ்கொட்லாந்து இவற்றைத் தேசிய அளவில் எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்திருக்கின்றது. நியூசிலாந்து, கென்யா ஆகிய நாடுகளில் இலவசமாக இப்பொருட்கள் பாடசாலைகளில் வழங்கப்படுகின்றன.
அமெரிக்காவில் சுமார் இரண்டு மாதங்கள், ஒருவரது மாதவிலக்குக்காலப் பொருட்களின் விலை சுமார் 7 – 10 டொலர்களாக இருக்கிறது. அவைகளைத் தேவைக்கேற்ற வாங்கும் வசதியில்லாதவர்களாக 14 % அமெரிக்கக் கல்லூரி மாணவிகள் நிலைமை இருக்கிறது. தவிரக் கருப்பின, லத்தினோ சமூகத்துப் பெண்களின் நிலைமையும் அதுவே. அந்த வசதியற்ற அப்பெண்கள் மன உழற்சியால் வாடுவதாக ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. அப்பொருட்கள் கிடைக்காததால் அந்த நாட்களில் பாடசாலைக்கோ, வேலைக்கோ போவதைத் தவிர்ப்பவர்களும் உண்டு என்கிறது ஆராய்ச்சி.
சாள்ஸ் ஜெ. போமன்