ஐரோப்பியத் தலைவரொருவரால் வரையப்பட்ட உக்ரேன் – ரஷ்யா சமாதானத் திட்டமொன்று ஈரான் மூலம் ரஷ்யாவுக்குக் கொடுக்கப்பட்டது.
இதுவரை பெயர் வெளியிடாத ஒரு ஐரோப்பியத் தலைவர் தம் மூலமாக ரஷ்யாவுக்கு ஒர் சமாதானத் திட்டத்தைக் கொடுத்திருப்பதாக ஈரான் தெரிவித்தது. உக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையே சமாதானத்தைக் கொண்டுவரக்கூடிய அந்தத் திட்டம் புதனன்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹுசேன் அமீரப்டுல்லாஹியான் மூலமாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லவ்ரோவிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.
ஈரானின் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசியிடமும் கையளிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் போர்க்கைதிகள் பரிமாற்றம், Zaporizhzhia அணுசக்தி நிலையத்தின் பாதுகாப்பு ஆகியவை பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பதாஹ அமீரப்டுல்லாஹியான் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்திருக்கிறார். Zaporizhzhia அணுசக்தி நிலையத்த்தில் தாக்குதல் நடந்து வருவதாக இரண்டு பகுதியாரிடமிருந்தும் குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டிருந்தன. இருவருமே அது மற்றத் தரப்பே என்று குறிப்பிட்டு வந்தது.
ஐ.நா-வின் தலையீட்டால் ஒரு வழியாகச் சர்வதேச அணுசக்தி தொழில்நுட்ப நிலையங்களைக் கண்காணிக்கும் அமைப்பின் ஆராய்ச்சியாளர்களை அந்த நிலையத்துக்குச் சென்று நிலைமையை ஆராய ரஷ்யாவின் அனுமதி கொடுக்கப்பட்டது. அதையேற்று ஏற்கனவே சர்வதேச ஆராய்ச்சிக்குழுவொன்று அங்கே சென்றிருப்பதாகவும், அவர்களைத் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருந்து நிலைமையைக் கண்காணிக்க அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்திருந்தன.
ஈரானின் செய்தி நிறுவனமொன்று இன்று வெளியிட்ட செய்தியில் அமைதித்திட்டத்தை வரைந்த ஐரோப்பியத் தலைவர் பிரெஞ்ச் ஜனாதிபதி மக்ரோன் என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. குறிப்பிட்ட விபரம் பற்றி இதுவரை எவரும் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்