பட்டத்து இளவரசனைப் பிரதமராக்கக் காரணம் அமெரிக்க நீதியில் இருந்து தப்பவைக்கவா?
கடந்த வாரம் சவூதி அரேபிய இளவரசன் முஹம்மது பின் சல்மான் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். அரசன் இதுவரை தன்னிடம் வைத்திருந்த முக்கிய பொறுப்புக்களைப் பலவற்றைப் பட்டத்து இளவரசனிடம் அதன் மூலம் கையளித்ததற்கான காலநேரம், சர்வதேச ரீதியில் கவனப்படுத்தப்படுகிறது. நாட்டின் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக்குவதன் காரணம் அவரை எந்த நாடும் நீதிமன்றத்துக்கு இழுத்துவிடாமல் பாதுக்காக்கவே என்று மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன.
துருக்கியிலிருக்கும் சவூதிய தூதுவராலயத்துக்குச் சென்றிருந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோஜ்ஜியை அதற்குள் வைத்துக் கொலை செய்ததை சவூதிய அரசே ஏற்றுக்கொண்டிருக்கிறது. அக்கொலையைப் பின்னின்று இயக்கியவர் என்று அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளின் விசாரணைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. அதைத் தவிர வேறு பல குற்றங்களும் முஹம்மது பின் சல்மான் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.
அவர் மீதான விசாரணைகளுக்காக அமெரிக்க நீதித்துறை அவரை விசாரித்துத் தண்டிக்கலாமா என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின் பேரில் ஆராயப்படுவதாக சமீப வாரங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அப்படியான ஒரு விசாரணையை ஒரு நாட்டின் அரசாங்க உறுப்பினர் மீது நடத்த முடியாத நிலையை உண்டாக்கவே முஹம்மது பின் சல்மானைப் பிரதமராக்கியிருப்பதாக மனித உரிமைகள் அமைப்புகள் குறிப்பிட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்