இவ்வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசும் மனித உரிமைப் போராளிகளுக்கே கொடுக்கப்பட்டது.
வழக்கம்போலவே இவ்வருடத்தின் ஒக்டோபர் மாத முதல் வாரத்தின் வெள்ளியன்று நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து நோபல் நினைவார்த்தமாகக் கொடுக்கப்படும் அமைதிக்கான பரிசைப் பெறுவது யாரென்று அறிவிக்கப்பட்டது. கடந்த வருடத்தைப் போலவே மனித உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் தம்மை அர்ப்பணித்திருப்பவர்கலுக்கே இவ்வருடமும் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது.
பெலாரூஸைச் சேர்ந்த அலெஸ் பியாலியஸ்கி அவர்களில் ஒருவர். மனித உரிமைகளுக்காகவும், ஜனநாயகச் சக்திகளின் வளர்ச்சிக்காகவும் தனது நாட்டில் 1990 களிலேயே இயக்கமொன்றை ஆரம்பித்தவர் அவர். சர்வாதிகார பெராரூஸ் அரசினால் 2020 ம் ஆண்டு முதல் சிறையில் விசாரணையின்றி அடைக்கப்பட்டு இருக்கிறார் அவர். “வசந்தம்” என்ற பெயரிலான தனது அமைப்பினால் நாட்டில் மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து வரும் அவரை சுமார் 20 தடவைகள் இதற்கு முன்னரே சிறையில் தள்ளியிருந்தது பெலாரூஸ்.
நோபல் பரிசை பியாலியஸ்கியுடன் பகிர்ந்துகொள்கின்றன மேலுமிருண்டு அமைப்புகள். 1980 களில் சோவியத் யூனியன் காலத்தில் மக்கள் ஒடுக்கப்பட்ட சமயத்திலேயே நிறுவப்பட்டுத் தொடர்ந்தும் ரஷ்யாவில் இயங்கிவரும் அமைப்பு மெமொரியால். ஸ்டானின் அரசால் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஆராய்ந்து ஆவணப்படுத்தியிருக்கிறது அந்த அமைப்பு. சோவியத் யூனியன் சிதறியபின் ரஷ்யாவின் அரசு செய்துவரும் அதே போன்ற கொடுமைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் மெமொரியால் ரஷ்யாவின் மிகப்பெரிய மனித உரிமைகள் அமைப்பாகும்.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளேயே மெமொரியால் அமைப்பின் ரஷ்ய அலுவலகம் பொலீசாரால் கையகப்படுத்தப்பட்டது. அந்தக் கட்டடமும் அதனுள் இருப்பவையும் ரஷ்ய அரசின் சொத்துக்களாக்கப்பட்டிருக்கின்றன.
உக்ரேனில் ஜனநாயகத்தைப் பலப்படுத்தி நாட்டைச் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கத்துவராகும்படி போராடும் அமைப்பான Center for Civil Liberties நோபலின் அமைதிக்கான பரிசைப் பெறும் மூன்றாவது அமைப்பாகும். உக்ரேனில் வாழும் சிறுபான்மையினரின் உரிமைகள் ஒடுக்கப்படுவதற்கு எதிராகக் குரல்கொடுத்துவரும் அந்த அமைப்பு 2007 இல் நிறுவப்பட்டது.ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குப் பின்னர் அவ்வமைப்பு சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் சேர்ந்து உக்ரேனில் ரஷ்யாவின் போர்க்குற்றங்களை ஆராய்ந்து ஆவணப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்