குளிர்கால ஆசிய விளையாட்டுப் போட்டிகளை 2029 இல் நடத்தவிருக்கிறது சவூதி அரேபியா.
2029 ம் ஆண்டுக்கான குளிர்கால ஆசிய விளையாட்டிப் போட்டிகளை நடத்த சவூதி அரேபியா தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக கம்போடியாவின் தலைநகரான புனொம் பென்னில் கூடிய ஆசிய ஒலிம்பிக் தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது. “சவூதி அரேபியாவின் பாலைவனங்களும், குன்றுகளும் விரைவில் குளிர்கால விளையாட்டுக்களின் மைதானமாகும்,” என்று தேர்வுக்குழு வெளியிட்ட அறிக்கையில் வேறெந்த நாடும் எதிர் வேட்பாளராக இருக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டது.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசனின் எதிர்காலத் திட்டங்களில் முக்கிய பங்கை வகிக்கும் நெயோம் [NEOM] பல்முக நகரத்தில் அந்த விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. 2017 இல் இளவரசன் முஹம்மது பின் சல்மானால் அறிமுகம் செய்யப்பட்ட நெயோம் எதிர்கால நகரத் திட்ட நிர்மாணச் செலவு சுமார் 500 பில்லியன் டொலர்கள். சூழலைப் பாதிக்காத எரிசக்தியில் முழுவதுமாக இயக்கம், பறக்கும் வாகனங்கள், இயந்திரமயப்படுத்தப்பட்ட சேவைகள் மட்டுமே அங்கே இருக்கும். அந்த நகரத்தின் இயக்கத்தின் மூலம் கரியமிலவாயு சூழலில் அதீதமாகாது. செங்கடலின் அருகே சுமார் 26,500 சதுர கி.மீ பரப்பளவில் நெயோம் 2030 இல் முழுமையடைந்திருக்கும்.
நெயோம் எதிர்கால நகரத்தின் ஒரு பகுதியாக 2026 இல் முழுமையடைய இருக்கும் த்ரொயானா என்ற பகுதியில் ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் 2029 இல் நடக்கவிருக்கின்றன. அங்கே குளிர்காலத்தில் உறையும் வெப்பநிலை இருக்குமென்றும், வருடத்தின் மற்றைய சமயங்களிலும் சுற்றிவர உள்ள பிராந்தியங்களை விட 10 பாகை செல்சியஸ் குறைவாகவே இருக்கும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிகழ்ச்சிகளில் 47 விதமான விளையாட்டுக்கள் இருக்கும். அவற்றில் 28 விளையாட்டுகள் தூளான பனியிலும், 10 விளையாட்டுகள் உறைந்த கட்டிப் பனியிலும் நடைபெறவிருக்கின்றன. பனிச்சறுக்கு, ஐஸ் ஹொக்கி, உறைபனி மீது இசைக்கான நடனம் ஆகிய விளையாட்டுக் கிளைகளில் போட்டிகள் நடைபெறும். 32 நாடுகள் அந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்