இந்தோனேசியாவில் உதைபந்தாட்ட மோதல்-விபத்து-மரணங்கள் நடந்த அரங்கு இடித்துப் புதிதாகக் கட்டப்படவிருக்கிறது.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னார் இந்தோனேசிய உதைபந்தாட்ட மோதல் நடந்தபோது ஏற்பட்ட கலவரத்தின்போது நூற்றுக்கும் அதிகமானோர் இறந்தது தெரிந்ததே. கலவரத்தை அடக்குவதாகப் பொலீஸ் கண்ணீர்ப்புகை, தடியடி நடத்தியது. ஒரு மைதானத்தில் பார்வையாளர்கள் இருக்கும்போது கையாளவேண்டிய வழிமுறைகள் அங்கே கடைப்பிடிக்கப்படவில்லை, ஆபத்தில் மக்கள் தப்பியோடத் திறந்திருக்க வேண்டிய வாசல்கள் பூட்டப்பட்டும் இருந்தன.
விபத்து பற்றி அறிந்ததும் அவ்விடயத்தில் கவனமெடுத்த ஜனாதிபதி யோக்கோ வுடூடு அதுபற்றி சர்வதேச உதைபந்தாட்ட அமைப்பின் நிர்வாகிகளுடனும் தொடர்பு கொண்டார். கலவரத்தில் ஈடுபட்ட உதைபந்தாட்டக் குழுவின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதுபற்றிய விசாரணைகளுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
“விபத்து நடந்த அரங்கு முழுவதும் மாற்றியமைக்கப்படும். இந்தோனேசியா ஒரு உதைபந்தாட்ட ஆரவலர்களின் நாடு. 100 மில்லியன் பேருக்கும் அதிகமானோரின் பொழுதுபோக்கு அது. உதைபந்தாட்டத்துறையை முழுவதுமாக நாம் நவீனப்படுத்தவிருக்கிறோம்,” என்று குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதியின் பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்