சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களில் ரஷ்ய வீரர்கள் மோத அனுமதி.

உக்ரேனுக்குள் ஆக்கிரமிப்புச் செய்திருக்கும் ரஷ்யாவுடன் சர்வதேச விளையாட்டுகளில் ஈடுபடத் தயாராக இல்லை என்று பல நாடுகளின் தேசிய அணிகளும் அறிவித்திருந்தன. கத்தாரில் நடக்கவிருக்கும் 2022 கோப்பையை வெல்ல மோதுவதற்காக தேசிய அணிகள் தெரிந்தெடுக்கப்படும் காலம் நெருங்குகிறது. சில வாரங்களில் ஆரம்பிக்கவிருக்கும் அந்த மோதல்களில் ரஷ்ய அணி வேறு பெயரில், தமது நாட்டின் கொடியின்றி ரஷ்யாவுக்கு வெளியே விளையாடலாம் என்று சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளனம் [Fifa] ஞாயிறன்று தெரிவித்தது.

சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் மேற்கண்ட முடிவு வரவிருக்கும் உலகக்கோப்பை மோதல்களில் பங்கெடுக்கவிருக்கும் நாடுகளான போலந்து, செக் குடியரசு, சுவீடன் ஆகியவற்றுக்குப் பெரும் அதிருப்தியைக் கொடுத்திருக்கின்றன. இந்த நாடுகள் மட்டுமன்றி பிரான்ஸ், ஐக்கிய ராச்சியம் போன்றவைகளின் தேசிய அணி வீரர்களும் தாம் ரஷ்ய அணியுடன் விளையாடப் போவதில்லை என்று ஆணித்தரமாகத் தெரிவித்திருக்கின்றனர்.

சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளன உயர்மட்டத்தினர் விரைவில் தேசிய அணிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து மீண்டும் தமது முடிவைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதன் பின்னரும் அதே முடிவு தொடருமானால் அப்போதும் ரஷ்யாவை மோதலில் சந்திக்கவிருக்கும் நாடுகள் மறுக்கும் பட்சத்தில் ரஷ்யா போட்டியின்றியே கத்தாரில் நடக்கவிருக்கும் மோதல்களில் பங்குகொள்ளும் வாய்ப்பு உண்டாகலாம் என்றும் நம்பப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்