உக்ரேன் தனது நாட்டுக்காகப் போரிட ஆயுதங்களை வாங்கிக்கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு.

உக்ரேனுக்குத் தேவையான பாதுகாப்பு ஆயுதங்களை சுமார் 450 மில்லியன் எவ்ரோவுக்கு வாங்கிக் கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருக்கிறது. ஒன்றியத்தின் சரித்திரத்தில் தன் பாதுகாப்புக்காகப் போரில் ஈடுபடும் நாடொன்றுக்கு ஆயுதங்களை வாங்கிக்கொடுப்பது இதுவே முதல் தடவையாகும். அதே சமயம், உக்ரேனை ஒன்றியத்தின் அங்கத்துவ நாடாக எதிர்காலத்தில் ஏற்றுகொள்ளவும் எண்ணமிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் ஞாயிறந்து மேற்கண்ட விடயம் பற்றிய எண்ணத்தை ஆரம்பிக்கக் காரணம், முதல் தடவையாக ரஷ்யாவின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஜெர்மனி முன்வந்ததாகும். இதுவரை காலமும் தனது வர்த்தக, கலாச்சார உறவு நாடான ரஷ்யாவை எந்த விதத்திலும் தண்டிக்க ஜெர்மனி மறுத்தே வந்திருந்தது.

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அமைதிக்கான திட்டமாகவே ஆரம்பிக்கப்பட்டது. எனவே ஒன்றியத்தின் கோட்பாடுகளின்படி எவருக்கும் போருக்கான ஆயுதங்களை வாங்கிக்கொடுக்கலாகாது என்கின்றன வரைமுறைகள். எனினும், ஒரு வருடத்தின் முன்பு ஐரோப்பிய ஒன்றியம் “ஐரோப்பிய அமைதிவழிக்கான நிதியம்” என்ற பெயரில் ஒரு தனியான நிதியத்தை ஆரம்பித்திருந்தது. 5.7 பில்லியன் வரை செலவழிக்கக்கூடிய அந்த நிதியத்தின் நோக்கம் தேவையான நாடுகளுக்கு இராணுவப் பயிற்சியையும், ஆயுதங்களையும் வழங்குவதாகும். அந்த நிதியிலிருந்து உக்ரேனுக்கான ஆயுதங்களை வாங்கப் பணம் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிறனு பல ஐரோப்பிய நாடுகளும் உக்ரேனின் போருக்காக வெவ்வேறு ஆயுதங்களையும் உபகரணங்களையும், பாதுகாப்புத் தளபாடங்களையும் வழங்குவதாக அறிவித்தன. பின்லாந்து தொடர்ந்தும் போர்ப் பாதுகாப்பு உபகரணங்களை மட்டுமே வழங்கும். அதைத் தவிர ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் உக்ரேன் அகதிகளை வரவேற்கவும் தயாராகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்