போர்முனையில் பின்வாங்கும் ரஷ்யா கச்சோவ்கா அணைக்கட்டைச் சுற்றி கண்ணிவெடிக்களைப் பொருத்தியிருக்கிறது.
கேர்சன் பிராந்தியத்தில் உக்ரேன் படை முன்னேறி வருவதால் பின்வாங்கிக்கொண்டிருக்கிறது ரஷ்யா. அப்பகுதியில் டினிப்ரோ நதியருகில் இருக்கும் கச்சோவ்கா அணைக்கட்டைச் சுற்றி ரஷ்யா கண்ணிவெடிகளைப் பொருத்தியிருக்கிறது என்று உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி குற்றஞ்சாட்டுகிறார். அதன் மூலம் பக்கத்திலிருக்கும் கேர்சன் நகரம் நீருக்குக் கீழே மூழ்கும் அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டுகிறார். 18 மில்லியன் கியுபிக் மீற்றர் நீர் அந்த அணைக்கட்டுக்குள் தேக்கவைக்கப்பட்டிருக்கிறது.
பின்வாங்கும் தருணத்தில் கச்சோவ்கா அணையை உடைப்பதன் மூலம் ரஷ்யா தனது படைகளைப் பாதுகாப்பதுடன், முன்னேறி வரும் உக்ரேன் இராணுவமே அந்த அணைக்கட்டை உடைத்ததாகப் பழி போடத் திட்டமிட்டிருக்கலாம் என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். அதனால் டினிப்ரோ நதி பெருக்கெடுத்து பல்லாயிரக்கணக்கானோரைப் பாதித்தல், உலகளவில் உக்ரேன் இராணுவத்துக்கு அவமதிப்பை உண்டாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கச்சோவ்கா அணைக்கட்டானது உக்ரேனின் தெற்குப் பகுதிகளுக்கான மின்சாரத்தைக் கொடுப்பதற்கு மிக முக்கியமானது. அது உடைக்கப்பட்டால் லட்சக்கணக்கானோருக்கான மின்சார வசதிகள் இல்லாது போகலாம். சமீப வாரங்களில் உக்ரேனின் எரிசக்தி மையங்களைக் குறிவைத்தே ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தி வருகிறது. குளிர்காலம் நெருங்கிவரும்போது உக்ரேன் மக்களின் மின்சார வசதியை உடைத்தெறிவதே ரஷ்யாவின் நோக்கம் என்று உக்ரேன் சுட்டிக் காட்டுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்