ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேரவேண்டுமென்று கோரிக் குரலெழுப்பும் பிரிட்டர்கள்!
“எல்லாவற்றுக்கும் காரணம் பிரெக்சிட் தான்,” என்று குரலெழுப்பியபடி பல்லாயிரக்கணக்கான பிரிட்டர்கள் லண்டனில் ஊர்வலம் போனார்கள். கடந்த இரண்டு வாரங்களாக ஐக்கிய ராச்சியத்தில் நடந்தேறிவருகிறது அரசியல் கூத்து. 45 நாட்களில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய லிஸ் டுருஸ், அதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்ட இடைக்கால வரவுசெலவுத் திட்டங்கள் அந்தக் கூத்துகளுக்கு ஆரம்பம் என்று குறிப்பிட்டால் அது தவறல்ல.
ஐக்கிய ராச்சியத்தின் சரித்திரதிலேயே குறுகிய காலத்தில் புரட்டப்பட்ட லிஸ் டுருஸ் அரசாங்கம் ஏற்படுத்திய அலங்கோலத்தைச் சரிசெய்யப்போவது யார் என்ற கேள்விக்கான பதில் திங்களன்று ஓரளவு தெளிவாகலாம். டுருஸ் இடம் தோற்ற ரிஷி சுனாக் தவிர முன்னாள் பிரதம மந்திரியான போரிஸ் ஜோன்சனும் போட்டிக்களத்தில் இறங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலாவதாகப் பென்னி மொர்டோண்ட் பிரதமராகப் போட்டியிடுவதாக அறிவித்த பின்னர் ரிஷி சுனாக் கட்சிக்குள் 100 பிரதிநிதிகளின் ஆதரவுடன் களத்திலிறங்குவதாக அறிவித்தார். மொர்டொண்டோ, ஜோன்சனோ இதுவரை பிரதமர் வேட்பாளர் ஒருவர் பெறவேண்டிய 100 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்தது தவறு என்று குரலெழுப்பி ஒக்டோபர் 22 ம் திகதியன்று லண்டனில் பல்லாயிரக்கணக்கானோர் ஊர்வலம் சென்றார்கள். நீல நிற நட்சத்திரங்களிலான கொடிகள் பல்லாயிரக்கணக்கில் காற்றில் பறந்தன. “ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்திருந்தால் இன்றைய நிலை ஏற்பட்டிராது”, “விலையுயர்வுகளை எதிர்த்து நிற்க மீண்டும் ஐரோப்பாவில் சேர்வோம்,” போன்ற கோஷங்கள் அவர்களின் கொடிகளில் இருந்தன.
சாள்ஸ் ஜெ. போமன்