ஐரோப்பாவின் எரிவாயுக் கையிருப்பு நிறைந்து, விலை பாதியாகியிருக்கிறது.
ஓரிரு மாதங்களாக வரவிருக்கும் ஐரோப்பாவின் குளிர்காலத்தில் மக்கள் தமது வீடுகளைத் தேவையான அளவுக்கு வெம்மையாக்க முடியாமல் தவிக்கப்போகிறார்கள் என்ற அச்சம் பரவியிருந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாட்டுத் தலைவர்கள் உலகமெங்கும் பறந்து தத்தம் நாடுகளுக்குத் தேவையான எரிவாயுத் தேவைக்காகத் திரவ எரிவாயுவைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் தமது எண்ணப்படி அவ்விடயத்தில் வெற்றிபெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது.
ரஷ்யாவிடம் தமது தேவைக்கான எரிவாயுக் கொள்வனவுக்குத் தங்கியிருந்த ஐரோப்பிய நாடுகள் அதைக் கொள்வனவு செய்வதைப் பெருமளவில் நிறுத்திவிட்டன. பதிலாக வெவ்வேறு நாடுகளிலிருந்து திரவ எரிவாயுவைக் கொள்வனவு செய்து தமது தேக்கும் கிடங்குகளை நிறைத்துக்கொண்டிருப்பதால் எரிவாயுவின் விலையேற்றம் நின்றுவிட்டது. பதிலாக விலைகள் பாதியாகக் குறைந்திருக்கின்றன.
ஜேர்மனி தனது எரிவாயு தேக்கும் கிடங்குகளை 98 விகிதத்தால் நிறைத்துவிட்டிருக்கிறது. ஸ்பெயின் துறைமுகங்களுக்கு வெளியே 30 திரவ எரிவாயுக் கப்பல்கள் தம்மிடமிருக்கும் எரிவாயுவை இறக்குவதற்காகக் காத்திருக்கின்றன. அவற்றைப் பெற்றுக்கொள்ள ஸ்பெய்னிடம் 6 தேக்கக்கிடங்குகள் மட்டுமே இருப்பதால் கப்பல்களுக்குக் காத்திருப்பு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
தெற்கு ஐரோப்பிய நாடுகளின் வெப்பநிலையானது வழக்கத்தை விட வெம்மையாக இருப்பதும் எரிவாயுத் தேவையை ஓரளவு குறைத்திருக்கிறது. வீடுகளில் வெப்பத்தை அதிகரிக்க வேண்டிய நிலை பல நாடுகளில் இன்னும் ஏற்படவில்லை.
தற்சமயத்துக்கு ஐரோப்பிய நாடுகள் எரிவாயுத் தட்டுப்பாடு இல்லையெனிலும் அடுத்த வருடக் குளிர்காலம் கடினமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்குப் போடப்பட்டிருந்த எரிவாயுக் குளாயே பெருமளவில் எரிவாயுவை ஐரோப்பாவுக்குக் கொண்டுவர வசதியாக இருந்தன. துறைமுகங்களில் எரிவாயுவைத் தேக்கும் தளங்கள் ஐரோப்பாவில் தேவையான அளவில் இன்னும் இல்லை. பல நாடுகள் அப்படியான துறைமுக எரிவாயுத் தளங்களைக் கட்ட ஆரம்பித்திருக்கின்றன. ஆயினும் வெளியேயிருந்து இறக்குமதி செய்யப்படும் திரவ எரிவாயுவின் விலை முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட விலையை விட அதிகமானதே.
சாள்ஸ் ஜெ. போமன்