அடுத்த மாதத்தில் ஒரு நாள் ஜோ பைடன், புத்தின், ஷீ யின்பிங் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடும்.
அடுத்த மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி செய்யப்போகும் ஒரு வாரச் சுற்றுப்பயணத்தின்போது அவர் கம்போடியா, இந்தோனேசியா, மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் வெவ்வேறு மாநாடுகளில் பங்குபற்றுவார். அமெரிக்காவில் நடக்கவிருக்கும் இடைக்காலத் தேர்தல்களின் பின்னர் அவர் தனது விஜயத்தை ஆரம்பிப்பார். குறிப்பிட்ட அந்தத் தேர்தல்கள் அமெரிக்காவின் பாராளுமன்ற, செனட் சபைகளில் இருக்கும் டெமொகிரடிக் கட்சியினரின் பெரும்பான்மையை இழக்கச் செய்யக்கூடும்.
எகிப்தின் ஷார்ம் எல் – ஷேக்கில் நடக்கவிருக்கும் COP 27 மாநாட்டில் நவம்பர் 11 ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கெடுப்பார். அதையடுத்து கம்போடியாவின் புனம் பென் நகரை நோக்கிப் பயணமாவார். கம்போடியாவின் புனம் பென் நகரில் அமெரிக்கா – ஆசியான், கிழக்கு ஆசியா மாநாடு நடக்கவிருக்கிறது. மூன்றாவது புள்ளியான இந்தோனேசியாவின் பாலியில் அவர் ஜி 20 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வார்.
ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக சீனத் தலைவர் ஷீ யின்பிங்கை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு ஜோ பைடனுக்கு பாலியில் ஏற்படும். அவர்கள் இருவரும் தத்தம் நாடுகளின் உப ஜனாதிபதிகளாக இருந்த சமயத்தில் பல தடவைகள் நேருக்கு நேர் சந்தித்திருக்கிறார்கள். தத்தம் நாடுகளின் தலைவர்களான பின்னர் தொலைத்தொடர்புகளின் மூலம் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறார்கள். இக்காலகட்டத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பிளவு என்றுமில்லாத அளவுக்கு விரிசலடைந்திருக்கிறது.
பாலியில் ஜோ பைடனும் ஷி யின்பிங்கும் இருக்கும் அதே சமயத்தில் அதே கட்டடத்தில் ரஷ்ய ஜனாதிபதி புத்தினும், சவூதி அரேபியப் பிரதமர்\பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானும் இருக்க வாய்ப்புண்டு.
வெள்ளை மாளிகையினால் ஜோ பைடனின் பிரயாண விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மற்ற மூன்று தலைவர்களின் பிரயாண, சந்திப்பு விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சீனத் தலைவரை ஜோ பைடன் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக வெள்ளை மாளிகை இம்மாத ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தது.
ஜோ பைடன் பாலியில் சவூதியப் பிரதமரையோ, ரஷ்ய ஜனாதிபதியையோ நேருக்கு நேர் சந்திப்பது என்பது இதுவரை நம்பமுடியாத ஒரு விடயமாகவே இருந்து வருகிறது. ரஷ்ய ஜனாதிபதியுடன் ஜூன் 2021 இன் ஜோ பைடன் இறுதியாக நேருக்கு நேர் சந்தித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்