தென்னாபிரிக்காவில் ஆரம்பித்திருக்கும் எத்தியோப்பியா – திகிராய் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.
நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற எத்தியோப்பியப் பிரதமர் அபி அஹமத் தனது நாட்டின் ஒரு பாகமான திகிராய் மாநிலத்தினரின் மீது நவம்பர் 2020 இல் போரொன்றைப் பிரகடனப்படுத்தினார். தமது மாநிலத்துக்கு இருந்த சுயாட்சி போதாது, தனிநாடாக்க வேண்டும் என்று கோரும் திகிராய் விடுதலை இயக்கத்தினரை முடியடிப்பதாக எத்தியோப்பிய மத்திய அரசு சங்கற்பம் பூண்டிருக்கிறது. நீண்ட காலமாகத் தொடரும் அப்போரில் முதல் தடவையாக இரண்டு தரப்பாரும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆபிரிக்க ஒன்றியத்தின் அதி முக்கிய நாடான தென்னாபிரிக்காவினால் இந்தப் பேச்சுவார்த்தைக்கான வித்துக்கள் விதைக்கப்பட்டன. ஆபிரிக்க ஒன்றியம் இதற்கு முன்னரும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக எடுத்த முயற்சிகள் பேச்சுவார்த்தை ஆரம்பிக்க முன்னரே அழுகிப்போயின. எத்தியோப்பியா இருக்கும் ஆபிரிக்காவின் விசனத்துக்குரிய மூலைப் பகுதியின் நிலைமை பற்றி ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையிலும் மூடிய கதவுக்குப் பின்னால் விவாதிக்கப்பட்டது.
கென்யா, நைஜீரியா நாடுகளின் முன்னாள் தலைவர்கள் பங்குபற்ற தென்னாபிரிக்காவின் தலைமையில் பிரிதோரியாவில் எத்தியோப்பியா – திகிராய் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஒக்டோபர் 25 ம் திகதி ஆரம்பித்தன. இரண்டு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையே நிலவும் மனவிரோதங்கள் கருதிப் பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் எதுவுமே வெளியே வராமல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சமீபத்தில் எத்தியோப்பியப் படையினர் திகிராய் பிராந்தியத்துக்குள் நுழைந்து சில நகரங்களைக் கைப்பற்றியிருந்தனர். அதையடுத்து பிரதமர் அபி அஹமத் வெளியிட்ட செய்தியில் இரண்டு தரப்பாரும் போரை நிறுத்துவதாகவும் அமைதி மீண்டும் நிலவும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பல மாநிலங்களையும், இனத்தவரையும் கொண்ட எத்தியோப்பியாவி திகிராய் மட்டுமே பிரச்சினைக்கு உரியதாக இல்லை. வெவ்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது ஆயுத மோதல்கள் மத்திய அரசின் இராணுவத்தினருடன் உண்டாகியிருக்கின்றன. பேச்சுவார்த்தைகள் நடக்கும் சமயத்தில் எத்தியோப்பியாவின் இன்னொரு சர்ச்சைக்குரிய பிராந்தியமான ஒரோமோவில் பலர் காற்றாடி விமானங்கள் மூலம் போடப்பட்ட குண்டுகளால் இறந்திருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்