சமாதான நோக்கத்துக்கு உதவியதாக நோபலின் பரிசுபெற்ற எப்.டபிள்யூ டி கிளார்க் மறைந்தார்.

மறைந்த தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவைத் தெரிந்து வைத்திருக்கும் பெருபாலானோருக்கு, அவருடன் சேர்ந்து நோபலின் அமைதிப் பரிசைப் பெற்றுக்கொண்ட பிரடெரிக் வில்லியம் டி கிளார்க்கைத் தெரியாது. 85 வயதான டி கிளார்க் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வியாழனன்று இறந்தார்.

“ தென்னாபிரிக்காவில் நிறவெறியால் ஒதுக்கிவைக்கப்பட்ட கறுப்பினத்தினரும், மற்றவர்களும் அடைந்த வேதனை, அவமானம், வலி போன்றவைகளுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று டி கிளார்க் வேண்டிக்கொண்டு வீடியோ படமொன்று அவர் இறந்தபின் வெளியிடப்பட்டது. அந்தச் செய்தியில் தனது இளவயதில் வெள்ளையரல்லாதவர்களை ஒதுக்கி, ஒடுக்கிவைக்கும் கோட்பாட்டைத் தானும் கொண்டிருந்ததாக அவர் ஒத்துக்கொண்டிருந்தார்.

1989 – 1994 வரை தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் சிறையில் வைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலாவுடன் தைரியமாகப் பேச்சுவார்த்தை நடாத்தியவர் டி கிளார்க். அவரது துணிவான அந்த முடிவே தென்னாபிரிக்கவை நிறவெறிக் கோட்பாட்டிலிருந்து விடுவித்தது. அதன் பின் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று நெல்சன் மண்டேலா நாட்டின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியானார்.

டி கிளார்க் தனது ஆட்சிக்காலத்தில் நடாத்தப்பட்ட நிறவெறி நடவடிக்கைகளுக்காகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கவேண்டும் என்று ஒரு சாரார் வாதிப்பதுமுண்டு.

சாள்ஸ் ஜெ. போமன்