கத்தாரின் மனித உரிமை மீறல்கள் பற்றிய ஜேர்மனிய அமைச்சரின் விமர்சனத்தை வளைகுடா நாடுகளின் கூட்டுறவு அமைப்பு சாடுகிறது.
உதைபந்தாட்டத்துக்கான உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்தும் நாடாகக் கத்தார் தெரிவுசெய்யப்பட்ட முதல் நாளிலிருந்தே அந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் பற்றிய விமர்சனங்கள் ஆரம்பித்திருந்தன. இவ்வாரத்தில் கத்தாருக்குப் பயணிக்கவிருக்கும் ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி பேஸர் கடந்த வாரம், “மனித உரிமைகளை மதிப்பதில் குறிப்பிட்ட ஒரு படியையாவது எட்டியிருக்காத நாடு கத்தார். அதுபோன்ற நாடுகளில் உலகக்கோப்பைப் பந்தயங்களை நடத்தாமலிருக்கவேண்டும்,” குறிப்பிட்டிருந்தார்.
ஜெர்மனிய அமைச்சரின் கடுமையான விமர்சனம் கத்தாரைச் சீற்றமடைய வைத்திருந்தது. ஜெர்மனியின் கத்தார் தூதுவரை நாட்டின் வெளிவிவகார அமைச்சு வரவழைத்து அந்தக் கூற்றில் தனக்கு அதிருப்தி இருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தது. இதுபோன்று வெளிநாட்டுத் தூதுவரின் காதைத் திருகும் காரியத்தைக் கத்தார் முன்னர் செய்ததில்லை.
கத்தார் மீதான தற்போதைய அமைச்சரின் விமர்சனம் ஜேர்மனியிலும் வெவ்வேறு விதமாக எதிர்கொள்ளப்பட்டது. நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சிக்மார் கபிரியேல், “கத்தார் மீது ஜேர்மனி காட்டிய திமிர் அது. எங்கள் நாட்டின் ஓரினச்சேர்க்கை 1994 ஆண்டுவரை தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. எனது தாயார் வேலைக்குப் போவதானால் இப்போதும் தனது கணவரின் அனுமதியைப் பெறவேண்டும். எங்கள் நாட்டுக்கு ஊதியத்துக்காக வேலைசெய்ய வரும் வெளிநாட்டவரை நாம் மோசமான வீடுகளில் தங்கவைத்து, மோசமாகக் கையாண்டோம். அதையெல்லாம் மறந்துவிட்டோமா?” என்று கோபமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
வளை குடாநாடுகளின் கூட்டுறவு அமைப்பு கத்தார் மீதான ஜேர்மனிய அமைச்சரின் விமர்சனத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. “இரண்டு நாடுகளுக்கு இடையேயான சுமுகமான உறவைப் பேணுவதற்கு இரண்டு தரப்பாரும் ஒருவரையொருவர் மரியாதையாக நடத்தவேண்டும். கத்தார் நடத்தவிருக்கும் உலகக்கோப்பை பந்தயங்களுக்காக நாம் பெருமைப்படுகிறோம்,” என்று அந்த அமைப்பின் பொதுக் காரியதரிசி நயப் அல் ஹஜ்ராப் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்