போதை என்னும் வதை
போதைப்பொருளின் பொல்லாப் பிடியினிற்
பாதைமாறிப் படுகுழி வீழ்ந்திடும்
காதைகள் கேட்டுக் காதுகள் வெந்தன!
கற்பனை கடந்த காட்சிகள் தெரிந்தன!
ஏதும் அறியா இளையவர் வாழ்வு
இழப்புகள் கண்டிவர் சிதைவதும் சாவதும்
சேதிகளாகிச் சிந்தையை வதைத்தன!
தீதுகள் செய்து தேசத்தை யழிக்கும்
தீயவர் கரங்கள் ஓங்கி உயர்ந்தன!
ஊதிப் பருக்கும் ஊழலும் இலஞ்சமும்
உரிமைகள் பறிக்கும் உலுத்தர்கள் ஆட்சியும்
நீதி மறுக்கும் நீண்ட வரலாறும்
நெருக்கடி நிறைந்த நாட்டின் வீழ்ச்சியும்
போதி மரத்துப் புத்தரின் பெயராற்
புரட்டும் பொய்யும் பேசும் மதமும்
வீதியில் இறங்கி விடுதலை வேண்டி
வெளிப்பட்டுள்ள மக்களின் கூட்டமும்
மோதிக் கிடக்கும் இருள் சூழ்ந்த நிலையில்
முனகும் தேசமாய் இலங்கை தேய்ந்தது!
ஈதிப்படியே இனியும் தொடரின்
இடரும் துயருமே எதிர்காலமாகும்!
ஆதிக் குடியினை அழித்திட எண்ணும்
அநீதிப் போக்கே அறத்தீயாய் மாறும்!
பாதிப்புற்ற பாவியர் ஏழையர்
பலங்களிழந்து பசியில் இறக்க..,
வாதித்திடவோர் வலியவர் இன்றி
வளங்கள் வற்றி வாடிச் சுருண்டு
ஓ! அத்தீவு உலகினை விட்டு
உதிர்ந்து போவதோ உண்மையின் தீர்வு?
சூரனை வதைத்த போரறம் போற்றி
வீரத்தை வணங்கும் வெற்றித் திங்களில்
ஊரெலாம் கூடி உணர்வுகள் பொங்க
ஊனுயிர் உருக்கி உவக்கின்ற தருணத்திற்
தூர இருந்து தேசத்தையெண்ணித்
துன்பப்பா பாடும் துர்ப்பாக்கியத்தை
யாரிடம் சொல்லி யான் முறைப்படுவேன்?
யாதொரு வழியில் தீதுகள் வெல்வேன்?
கூரிய அறிவின் ஞானவேல் முருகா!
தீர்வருள்வாயெம் தீவினை கெடவே!
—புலவர் சிவநாதன்–