பஹ்ரேனுக்கு நவம்பர் 3 – 6 திகதிகளில் விஜயம் செய்யவிருக்கும் பாப்பரசர்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், பாதுகாவலருமான பாப்பரசர் பிரான்சீஸ் மேலும் ஒரு வாரத்தில் பஹ்ரேனுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். “கிழக்கிலும், மேற்கிலும் வாழும் மனிதர்களின் ஒற்றுமையான வாழ்வுக்கான உரையாடல்” என்ற நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காகவே பாப்பரசர் பஹ்ரேனுக்குப் பயணம் செய்யவிருக்கிறார். பஹ்ரேனிய அரசன் ஹமாத் பின் ஈசா அல் காலிபா அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நடத்தவருக்கிறார்.
இரண்டு நாட்கள் நடக்கவிருக்கும் அந்த நிகழ்ச்சி அரசன் ஹமாத் பல்கலைக்கழகத்தின் மனிதகுலத்தின் ஒற்றுமையான வாழ்வுக்கான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். வெவ்வேறு மத விசுவாசிகளுக்கு இடையேயான உரையாடல் மூலமாக ஒற்றுமையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
பாப்பரசரின் பஹ்ரேன் விஜயத்தையொட்டி மனித உரிமை அமைப்புகள் அவர் அங்கே நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றிக் குரலெழுப்ப வேண்டுமென்கிறார்கள்.
“பஹ்ரேனில் ஆளும் அரச குடும்பம்த்தினர் அதன் தமது சர்வாதிகாரத்தை பாதுகாக்க மத பாகுபாட்டை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். அது மனித உரிமை மீறல்களை மறைக்க வெவ்வேறு மதங்களின் சகவாழ்வு என்ற பெயரில் பாப்பரசரின் வருகையை விளம்பரத்துக்காகப் பயன்படுத்துகிறது,” என்று ஒரு மனித உரிமைகள் அமைப்பு கத்தோலிக்க திருச்சபையின் தலைமைக்குத் தமது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறது.
பஹ்ரேனின் எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் பாப்பரசரிடம் தொடர்பு கொண்டு நாட்டில் சிறைவைக்கப்பட்டிருக்கும் மனித உரிமை ஆர்வலர்களையும், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும்படி பஹ்ரேன் ஆளும் குடும்பத்திடன் கோரும்படி வேண்டிக்கொண்டிருக்கின்றது.
தனது விஜயத்தின்போது பாப்பரசர் பஹ்ரேன் அரசன் ஹமாத் பின் ஈசா அல் காலிபா அவர்களைச் சந்திக்கவிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்