சூடானின் இராணுவ ஆட்சியாளர்களும், எதிரணியினரும் சேர்ந்து புதிய அரசியலமைப்புச் சட்டத்தை மக்கள் முன்வைத்தனர்.
சூடானில் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவத் தளபதிகளுக்கெதிராகப் போராடிய ஜனநாயக அமைப்புகளுடைய கோரிக்கைகள் செவிமடுக்கப்பட்டிருக்கின்றன. சர்வதேச மத்தியஸ்தர்களின் உதவியும் இராணுவத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களும், இராணுவ ஆட்சியாளர்களும் சேர்ந்து உண்டாக்கிய புதிய அரசியலமைப்புச் சட்டங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
சுமார் ஒரு வருடத்துக்கும் அதிகமாகச் சூடானில் எழுந்திருக்கும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு இந்த நகர்வு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், ஜனநாயக எதிரணியில் ஒரு சாரார் இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தைகள் வைப்பதை எதிர்த்ததால் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவில்லை. அவர்களிடையே தொடர்ந்தும் அதிருப்தியே நிலவுகிறது.
சூடானில் இஸ்லாமிய ஆட்சியை அமைப்பதற்காகப் போராடிவருபவர்களும் சர்வதேச நடுவர்களின் உதவியுடனான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்ற மறுத்துவிட்டிருந்தார்கள்.
மூன்று தசாப்தங்களாக ஒமர் அல்-பஷீரின் கீழ் சூடான் சர்வாதிகார ஆட்சியைக் கொண்டிருந்தது. மக்கள் போராட்டத்தால் ஏப்ரல் 2019 இல் அல் – பஷீர் தூக்கியெறியப்பட்டார். அதன் பின்னர் பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் அதிகாரம் பகிரப்பட்ட அரசாங்கமொன்று பதவியேற்றது. அவர்களின். ஒப்பந்தத்தின்படி, 2022 இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், சில மாதங்களில் பொதுமக்களின் ஆட்சி உறுப்பினர்களை ஒதுக்கிவிட்டு இராணுவத் தளபதி அப்துல் பத்தாஹ் புர்கான் ஆட்சியை சக தளபதிகளுடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றிவிட்டார். அதன் பின் சுமார் ஒரு வருட காலமாகவே மக்கள் மறியல்கள், ஊர்வலங்கள் நடத்தித் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். சர்வதேச அளவிலும் புர்கானுக்கு மேல் அரசியல், பொருளாதார அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்