உதைபந்தாட்டத் திருவிழாவின்போது பாதுகாப்புக்காகத் தனது போர்க் கப்பலுடன் கத்தாரில் துருக்கி.
ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, பாகிஸ்தான், இத்தாலி, துருக்கி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து Operation World Cup Shield என்ற பெயருடன் உதைபந்தாட்டத்துக்கான உலகக் கோப்பைப் பந்தயங்கள் நடக்கும் தருணத்தில் கத்தாரில் பாதுகாப்புக்காகச் செயற்படுவார்கள். அவர்களில் மிகவும் முக்கிய பொறுப்பு எடுக்கவிருக்கிறது துருக்கியின் பிரத்தியேக அதிரடிப்படை. TCG Burgazad என்ற துருக்கியின் போர்க்கப்பல் 250 பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஏற்கனவே கத்தாரை அடைந்திருக்கிறது.
Özel-Harekat பொலீஸ் படையினர் தீவிரவாதத்தை எதிர்கொள்ள துருக்கிய அரசால் உருவாக்கப்பட்டது. அவர்களுடைய நடவடிக்கைகளில் பல மனித உரிமை மீறல்கள், அதிகப்படியான வன்முறை என்று விமர்சிக்கப்பட்டது. அதனால் அப்படையின் கோட்பாடுகள் மாற்றப்பட்டு வருகின்றன. அவர்களில் 100 பேரும், துருக்கியின் கலவர ஒடுக்கும் படையின் 3,000 பேரும் சேர்ந்து கத்தார் பொலீஸ் தலைமையின் கீழ் செயற்படுவார்கள். அவர்கள் தமது கத்தார் பணிகளில் செய்யும் எவற்றுக்கும் தனிப்பட்ட முறையில் பொறுப்பெடுக்கத் தேவையில்லை என்ற ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்