டொனால்ட் டிரம்ப் தனது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் அமெரிக்கத் தேர்தல்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களை முடுக்கிவிட்டுத் தனது பலம் கட்சிக்குள் எப்படியிருக்கிறது என்பதைப் பரீட்சிக்கும் தேர்தலாகவும் நவம்பர் 08, 2022 தேர்தல் அமைந்திருந்தது. 2020 தேர்தல் முடிவுகள் பொய்யானவை என்றும் அதன் மூலம் தனது வெற்றி பறிக்கப்பட்டதாகவும் கூறிவருகின்றனர் டிரம்ப்பும் அவரது ஆதரவாளர்களும். அதுவும், டிரம்ப்பினால் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரும் சேர்ந்து அவரது ரிபப்ளிகன் கட்சிக்குள் அவருக்கெதிரான பாகமொன்றையும் உண்டாக்கியிருக்கிறது. அக்கட்சிக்குள் என்றுமில்லாத அளவு பிளவு ஏற்பட்டிருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். அந்தக் கலவரக்குளத்துக்குள் தனக்கான ஆதரவு எப்படியிருக்கிறது, அதை வைத்து மீண்டும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகலாமா என்பதை அறிந்துகொள்ள ஆர்வத்துடனிருக்கிறார் டிரம்ப்.
பதவி பறிபோனதிலிருந்தே தனது ஆதரவாளர்களைப் பல வழிகளிலும் தூண்டிவிட்ட டிரம்ப் நிதி சேர்ப்பதிலும் இறங்கினார். கட்சிக்குள் தனது பிடியில் சேர்த்து வைத்திருக்கும் நிதியைப் பயன்படுத்தி நடந்த தேர்தலில் தனக்கு ஆதரவான வேட்பாளர்கள் பலரை முன்னிறுத்தி வெற்றிபெறச் செய்திருக்கிறார். அவர்களைப் பயன்படுத்தி மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராவதும், தனக்கு எதிராக மற்றவர்கள் எவரும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்வதும் அவரது நோக்கமாகும்.
பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளில் ஒன்றான செனட் சபையின் 35 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபைக்கான 435 இடங்களுக்கும் மக்கள் வாக்களித்தார்கள். செனட் சபையின் இடங்களிலேயே பொறிபறக்கும் போட்டி நடந்து வருகிறது. அச்சபைக்காகப் புளோரிடாவில் வேட்பாளராக நின்று இரண்டாம் தடவையாகப் பெருவெற்றி பெற்றிருப்பவர் ரொன் டிசாந்திஸ். ரிபப்ளிகன் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப்புக்குச் சவால்விடத் தயாராக அவர் போட்டியில் குதிக்கவிருப்பதாகப் பலர் குறிப்பிட்டு வருகிறார்கள்.
டிசாந்திஸ் வெற்றிபெறப்போவது தெரிந்தவுடனேயே டிரம்ப் அவரைப் பற்றிய அவதூறான விடயங்களை வெளியிடவிருப்பதாகப் பகிரங்கத்தில் மிரட்டியிருக்கிறார். “உன்னைப்பற்றி உனது மனைவிக்கே தெரியாத விடயங்கள் எனக்குத் தெரியும். தயாராக இரு!” என்பது டிரம்ப்பின் மிரட்டலாகும்.
அதைத் தவிர நவம்பர் 15 ம் திகதி தான் மிகப்பெரிய ஒரு செய்தியை வெளியிடப் போவதாகவும் தேர்தல் தினத்துக்கு முன்னர் டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார். அது அவர் தான் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கப்போவதற்கான அறிவிப்பாக இருக்கலாம் என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறது.
டிரம்ப் தனது ஆதரவைக் கொடுத்துவந்த ஒரு பிரபலம் மெஹ்மெத் ஓஸ் [Mehmet Oz] ஆகும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்திப் பெரும் புகழ்பெற்ற பிரபலமான ஓஸ் மூலம் பென்சில்வேனியாவில் டெமொகிரடிக் கட்சியினரின் ஜோன் பெட்டர்மானை வெற்றிபெறுவதற்காக டிரம்ப் செய்த முயற்சி தோற்றுப் போயிருக்கிறது. 2004 ம் ஆண்டு முதல் டெமொகிரடிக் கட்சியினரே வென்றுவந்த அந்த மாநிலத்தை மீண்டும் அவர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள்.
பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல்களில் டிரம்ப் நிறுத்திய பலரும் கூட பெருமளவு நிதியைச் செலவழித்த பின்னரும் தோல்வியடைந்திருப்பதாக ரிபப்ளிகன் கட்சிப் பிரதிநிதியொருவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்