“போலத்தில் விழுந்தது தம்மால் ஏவப்பட்ட குண்டல்ல என்று சொல்வதை உக்ரேன் நிறுத்தவேண்டும்,” என்கிறது போலந்தின் வெளிவிவகார அமைச்சு.
உக்ரேன் எல்லையிலிருந்து சுமார் ஐந்து கி.மீ உள்ளே போலந்துக்குள் விழுந்து வெடித்த ஏவுகணைக் குண்டு இருவரின் உயிர்களைக் குடித்தது. நாட்டோ அங்கத்துவ நாடொன்றை ரஷ்யா திட்டமிட்டுத் தாக்கிச் சுரண்டிப் பார்க்கிறதா என்ற கேள்வியை எழுப்பிய அந்தச் சம்பவம் போரானது ஐரோப்பாவெங்கும் பரவி உலக நாடுகளையெல்லாம் இழுக்குமா என்ற சஞ்சலத்தைப் பரப்பியது. நாட்டோ தலைமை, அமெரிக்கா, போலந்து சகல பக்கங்களும் அடுத்தடுத்த நாட்களிலேயே அது ரஷ்யாவால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயலல்ல என்றும் தம்மைக் காத்துக்கொள்ள உக்ரேன் செலுத்திய பாதுகாப்புக் குண்டே என்று ஒன்று சேர்ந்து குறிப்பிட்டன.
உக்ரேன் தரப்பிலிருந்தோ தொடர்ந்தும் அது ரஷ்யாவின் குண்டே என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டு வருகிறது. அது விழுந்த இடத்தில் நடத்தப்படும் ஆராய்வுகளில் தாமும் பங்கெடுக்க வேண்டும் என்று கோரினார் உக்ரேன் ஜனாதிபதி செலென்ஸ்கி. போலந்து அவ்விடயத்தில் ஒத்துப்போன பின்னரும் உக்ரேன் முழுச் சமாதானமடையவில்லை.
‘தொடர்ந்தும் அக்குண்டு தமதில்லையென்று ஒற்றைக்காலில் நிற்பதை உக்ரேன் நிறுத்தவேண்டும், இல்லையேல் அது உக்ரேனுக்கும் நாட்டோ நாடுகளுக்குமிடையே மனக்கசப்பை ஏற்படுத்தலாம்’ என்று போலந்தின் வெளிவிவகார அமைச்சு எச்சரித்திருக்கிறது. தற்போதைய நிலைமையில் அது ஒரு பிரச்சினையாக இல்லையெனிலும் இது தொடருமானால் போலந்து – உக்ரேன் உறவுகள் பாதிக்கப்படலாம் என்றும் அவ்வெச்சரிக்கை தொடர்கிறது.
உக்ரேனுக்கு மிகவும் ஆதரவைக் கொடுத்து, அங்கிருந்து வெளியேறும் அகதிகளை மனது திறந்து வரவேற்று வரும் நாடுகளில் முதன்மையானது போலந்து என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்