கட்டார் அரங்குகளில் பியர் விற்கத்தடை|கடைசி நேர அறிவிப்பால் வலுக்கும் எதிர்ப்புகள்
கட்டார் 2022 உலக கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெறும் அரங்குகளிலும் சூழவுள்ள பகுதிகளிலும் பியர் விற்பனை தடை செய்யப்படுவதாக சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் FIFA அறிவித்துள்ளது.
கடைசிநேர தடை அறிவிப்பாக இது வந்துள்ளதால் குறித்த விடயம் தொடர்பில் உதைபந்தாட்ட ரசிகர்கள் மட்டத்தில் பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் வந்த இந்த அறிவிப்பு உதைபந்தாட்ட ரசிகர்கள் நாட்டுக்குள் வந்தபின் வேண்டுமென்றே ஏமாற்றும் செயல் என்ற கண்டனங்கள் எழுந்துள்ளன.
வரும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் டிசெம்பர் 18 ஆம் திகதிவரை உலகக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி துவங்கவுள்ளது,
அதனடிப்படையில் உலகக் கிண்ணத்தை நடாத்தும் நாடான கத்தார் உயர் அதிகாரிகளுடனான இறுதிக்கட்ட கலந்துரையாடல்களின் பின்னரே குறித்த இந்த தீர்மானத்தை பீபா அறிவித்துள்ளது.
கடந்த செப்ரெம்பர் மாதத்தில் காஸ்பந்தாட்ட அரங்குகளுக்கு அண்மையிலும் உள்ளேயும் பியர் விற்க அனுமதிக்கப்படும் என குறிப்பிட்டிருந்ததாக இங்கிலாந்தை உதைபந்தாட்ட ரசிகர் சங்கத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில்தான் ரசிகர்களுக்கு பியர் விற்பனை செய்வதற்காக அனுசரணை நிறுவனமான பட்வைசரின் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தது . ஆனால் தற்போது பியர் விற்பனை திடீர் தடை அறிவிக்கப்பட்டுள்ளது பலத்த ஏமாற்றத்தை அனுசரணை நிறுவனத்துக்கும் ஏற்படுத்தியுள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அரங்குகளில், சில விஐபி பகுதிகள், கட்டாரின் தலைநகர பிரதான fifa ரசிகர் வலயம், மற்றும் தனியார் ரசிகர் வலயங்கள் அவற்றுடன் அனுமதிப்பத்திரம் பெற்ற 35 ஹோட்டல்கள், விடுதிகளில் ஆகியவற்றில் பியர் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.