கத்தாருக்கெதிராக இரண்டு தடவைகள் பந்தை வலைக்குள் போட்ட என்னர் வலென்சியா முதல் நாளின் கதாநாயகன்.
கத்தார் நாட்டில் உதைபந்தாட்ட விழா கோலாகலமாக ஞாயிற்றுக்கிழமையன்று ஆரம்பமானது. ஆரம்ப மோதலில் வரவேற்கும் நாடான கத்தாரை எதிர்கொண்டது ஈகுவடோர். மோதல் முழுவதும் பெரும்பாலாக மைதானத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்ட ஈகுவடோர் அணியினர் 2 – 0 என்ற வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்கள்.
கத்தாரின் அணியினர் பந்தை எடுத்துக்கொண்டு தங்களிடையே பரிமாறவோ, எதிரணியின் பகுதிக்குள் நுழையவோ திணறினாலும் கூட கத்தாரின் விசிறிகள் மோதல் நடந்த நேரம் முழுவது உற்சாகமாக அவர்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டேயிருந்தார்கள்.
உலகக்கோப்பைப் பந்தயங்களை நடத்திய நாடுகளின் சரித்திரத்தில் 92 வருடங்களில் முதல் மோதலில் தோற்ற நாடாகியது கத்தார். 67,372 பேர் மோதலைக் காண அரங்குக்கு வந்திருந்தார்கள்.
மோதலின் ஆரம்ப நிமிடங்களிலேயே ஈகுவடோரின் என்னர் வலன்சியா எதிரண்யினரில் வலைக்குள் பந்தைப் போட்டார். ஆனால், அதைக் கமராவில் பார்த்தபின் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், சில நிமிடங்களில் கத்தாரின் வலையைக் காப்பவர் செய்த தவறால் அவர்களுக்கெதிராக தண்டனை கொடுக்கப்பட்டது.
மிக இலகுவாக அந்தப் பந்தை வலைக்குள் உருட்டிவிட்டார் வலன்சியா. 31 வது நிமிடத்தில் மயிரிழை வித்தியாசத்தில் வலைக்குள் விழக்கூடியதாகப் பந்தைத் தலையால் முட்டி உள்ளே போட்டார் அதே வலன்சியா. அதுவே மோதலின் முடிவாகவும் இருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்