உதைபந்தாட்ட அரங்கைத் துப்பரவு செய்து உலகையே அதிரவைத்த ஜப்பானிய விசிறிகள்.
நான்கு தடவைகள் வெற்றிக்கிண்ணத்தைப் பெற்ற ஜேர்மனிய உதைபந்தாட்டக் குழுவினரைத் தமது முதலாவது ஆட்டத்தில் வென்று ஜப்பானியத் தேசியக் குழு எல்லோரையும் ஆச்சரியத்தில் முக்கவைத்தது. அந்த உதைபந்தாட்ட நிகழ்ச்சியைப் பார்க்க வந்த ஜப்பானிய விசிறிகளோ அதைவிட ஒரு படி மேலே போனார்கள்.
சமுராய் நீலம் என்றழைக்கப்படும் ஜப்பானிய உதைபந்தாட்ட ரசிகர்கள் உதைபந்தாட்ட மோதல் முடிந்து அங்கிருந்து எல்லோரும் வெளியேறியதும் அரங்கத்தைத் துப்பரவாக்க ஆரம்பித்தார்கள். அங்கே பணியாற்றும் துப்பரவுத் தொழிலாளர்களுடன் சேர்ந்து அங்கே போடப்பட்டிருந்த குப்பைகளைப் பைகளில் அள்ளி ஒன்றுசேர்த்தனர். அவர்களால் நூற்றுக்கும் அதிகமான குப்பைப் பைகள் நிறைக்கப்பட்டன.
தமது அணி வெற்றிபெற்றதற்காக அவர்கள் அங்கே துப்பரவு செய்யவில்லை. கடந்த முறை உலகக்கோப்பைக்கான மோதல்கள் ரஷ்யாவில் 2018 இல் நடந்தபோதும் அவர்கள் இதையே செய்தார்கள். பெல்ஜியத்துடன் தமது அணி 2 – 3 என்று தோற்றுப் போனபோதும் ஜப்பானியர்களின் பண்பு அதே போலவே இருந்தது.
தாம் இருந்த இடத்தைத் துப்பரவுசெய்துவிட்டுப் போகும் ஜப்பானியர்களின் அந்தப் பண்பு பலரையும் ஆச்சரியப்படுத்தினாலும் அதைப் பற்றி ஜப்பானியர்கள் சாதாரமாகவே கருதுகிறார்கள்.
“நாங்களே எங்கள் மலசலகூடங்களைத் துப்பரவு செய்கிறோம். எங்கள் வீடுகளை, எங்கள் அறைகளைத் துப்பரவாக வைத்திருக்கிறோம். ஒரு இடத்திலிருந்து நாம் விலகும்போது அவ்விடத்தைத் துப்பரவாக்கிவிட்டுப் போவது எங்களுக்குச் சிறு வயதிலிருந்தே பழக்கமாகிவிட்டது. எமது கல்வியிலும் அது கற்பிக்கப்படுகிறது,” என்கிறார்கள் ஜப்பானிய விசிறிகள்.
சாள்ஸ் ஜெ. போமன்