தென்னாபிரிக்க ஜனாதிபதி சட்டவிரோதமாக காரியங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றது பாராளுமன்ற ஆராய்வு.
இவ்வருட ஜூன் மாதம் வெளியாகித் தென்னாபிரிக்க அரசியலைக் குழப்பிக்கொண்டிருக்கிறது ஜனாதிபதி தான் ஒளித்து வைத்திருந்த கள்ளப் பணம் பற்றிய விபரங்கள் வெளிவராதிருக்க ஒரு கடத்தல் நடவடிக்கைக்குக் காரணமாக இருந்தாரா என்ற கேள்வி. வெளியாகிய விபரங்களை விசாரித்த பாராளுமன்ற ஆராய்வுக் குழுவொன்று ஜனாதிபதி தீவிரமான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று தனது முடிவைக் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.
நாட்டின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் பதிவுசெய்த விபரமொன்றில் ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் உல்லாச வீடு ஒன்றினுள் கள்வர்கள் நுழைந்து அங்கிருந்த தளபாடங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 மில்லியன் டொலர்கள் நோட்டுக்களைக் களவாடியதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த நிகழ்ச்சியை ரமபோசா பொலீசாரிடம் தெரிவிக்காமல் அக்கள்வர்களைக் கடத்திச் சென்று விசாரித்து அவர்களுக்குப் பணம் கொடுத்து அவர்களின் வாயை அடைத்துவிட்டார் என்று குறிப்பிடப்படுகிறது.
பாராளுமன்றக் குழுவின் அறிக்கையையடுத்து ரமபோசா பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுப்பப்பட்டிருக்கிறது. அவரது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் ரமபோசாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் என்று கோஷ்டிகள் பிரிந்திருக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் அவருக்கு ஆதரவளிப்பதாகவே தகவல்கள் குறிப்பிடுகின்றன. வார இறுதியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரம்போசா தான் பதவி விலகும் உத்தேசமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
திங்களன்று கூடவிருக்கும் பாராளுமன்றத்தின் வெவ்வேறு குழுக்களிடையே என்ன முடிவெடுப்பது என்பது பற்றிய விவாதங்கள் நடபெறவிருக்கின்றன. அவரது கட்சியினரின் நிர்வாகக் குழுவினரும் ஒன்றுகூடி ரமபோசாவின் எதிர்காலம் பற்றி விவாதிக்கவிருக்கிறார்கள்.
செவ்வாய்க்கிழமையன்று உத்தியோகபூர்வமாக, பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருக்கிறது ரமபோசாவின் சட்டவிரோத நடவடிக்கை பற்றிய அறிக்கை. அதன் மீதான விவாதங்கள் நடந்து வாக்கெடுப்புக்கும் அது விடப்படும். ஜனாதிபதியை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரிப்பதா என்பது பற்றிப் பாராளுமன்றம் முடிவெடுக்கும்.
டிசம்பர் 16 ம் திகதியன்று ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தமது தலைவரைத் தெரிவு செய்யும் நாளாகும். அன்றைய தெரிவில் ரமபோசா மீண்டும் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டாலே நாட்டின் ஜனாதிபதியாகத் தொடரமுடியும்.
சாள்ஸ் ஜெ. போமன்