ஜேர்மனியப் பாராளுமன்றத்தின் மீது தாக்கி நாட்டைக் கைப்பற்றத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் கைது!
புதன்கிழமை அதிகாலையன்று ஜேர்மனியின் பல இடங்களில் அதிரடியாக வலதுசாரித் தீவிரவாதக் கும்பல் ஒன்றின் மீது பொலீசார் வலைவிரித்தார்கள். அதன் மூலம் நாட்டின் பாராளுமன்றத்தைத் தாக்கிக் கைப்பற்றித் தமது ஆட்சியை நிலைநாட்டத் திட்டமிட்டிருந்த ஒரு இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 25 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
சுமார் 3,000 பொலீஸ் உத்தியோகத்தர்கள் ஒரே சமயத்தில் நாட்டின் 140 இடங்களில் இதற்கான தேடுதல்களையும் கைதுகளையும் செய்தார்கள். வலதுசாரித் தேசிய கட்சியான “ஒரு மாறுதலான ஜேர்மனி” இன் முக்கிய பிரமுகர் ஒருவரும், முன்னாள் பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு 72 வயது நபரும் தீவிரவாதிகள் கும்பலின் முக்கியத்தவர்களாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. நாட்டின் அதிரடிப் படை, இரகசியப் பொலீஸ் அமைப்பு, பாதுகாப்பு சேவை ஆகியவற்றினுள்ளும் தீவிரவாதிகளுக்கான ஆதரவாளர்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
குறிப்பிட்ட வலதுசாரித் தீவிரவாதிகள் பெர்லினிலிருக்கும் பாராளுமன்றத்தின் மீது தமது தாக்குதல்களை இவ்வருவம் மார்ச், செப்டெம்பர் மாதங்களில் நடத்தவிருந்தனர் என்று பொலீசார் தெரிவிக்கின்றனர். நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஏதுவான நிலைமையை உண்டாக்குவதற்காக அத்தீவிரவாதிகள் நாட்டின் மின்சார வினியோகத்தை நிறுத்தி நாடெங்கும் நிலைக்குலைவை ஏற்படுத்தவும் திட்டமிட்டிருந்தார்கள்.
இன்றைய கைதுகளைப் பற்றி டுவீட்டியிருக்கும் ஜேர்மனிய நீதியமைச்சர் “ஜனநாயக அமைப்பால் தனது எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதையே பொலீசார் நடத்தியிருக்கும் நடவடிக்கைகள் நிரூபித்தன,” என்று டுவீட்டினார்.
சாள்ஸ் ஜெ. போமன்