மக்ரோன் வந்தால் வரேன் என்கிறார் ஆஸார்பைஜான் ஜனாதிபதி, அவர்தான் வரவேண்டுமென்று ஆர்மீனியப் பிரதமர்.
பெல்ஜியத்தின், பிரசல்ஸ் நகரில் டிசம்பரில் நடக்கவிருக்கிறது நகானோ – கரபாக் பிராந்தியம் பற்றிய ஆஸார்பைஜான் – ஆர்மீனியச் சமாதானப் பேச்சுவார்த்தை. ஆர்மீனியப் பிரதமர் அந்தப் பேச்சுவார்த்தைக்கு பிரெஞ்ச் ஜனாதிபதி வந்தே ஆகவேண்டுமென்கிறார். ஆஸார்பைஜான் ஜனாதிபதியோ இம்மானுவேல் மக்ரோன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றினால் தான் வரப்போவதில்லை என்கிறார்.
ஆஸார்பைஜானில் ஆர்மீனியர்கள் பெரும்பான்மையகா வாழும் பிராந்தியமான நகானோ – கரபாக்கினுள் ஆர்மீனியா 1980- களில் நுழைந்ததால் இரண்டு நாடுகளுக்குமிடையே உண்டாகிய கசப்பு வளர்ந்திருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயிருக்கும் எல்லையில் சமீபகாலத்தில் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கைகளால் சுமார் 300 பேர் இறந்திருக்கிறார்கள்.
நகானோ – கரபாக் பிராந்தியப் பிரச்சினையில் பிரான்ஸ் ஆர்மீனியாவுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார் ஆஸார்பைஜான் ஜனாதிபதி ஈழம் அலியேவ். அதனால் டிசம்பர் 07 திகதி நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் பிரெஞ்ச் ஜனாதிபதி பங்கெடுத்தால் தான் வரமாட்டேன் என்கிறார். ஆர்மீனியப் பிரதமர் நிக்கோல் பஷ்னியான் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதைத் தவிர்க்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டுகிறார் அலியேவ்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசோசனைக் குழுவினரால் கடந்த மாதம் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் அவ்விரு தலைவர்களும் பங்கெடுத்திருந்தனர். அவர்களிடையே அமைதிப்பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது நகானோ – கரபாக் பகுதியில் தனது அமைதிகாக்கும் படையை வைத்திருக்கும் ரஷ்யா. எனவே, தமது பங்குபற்றுதலும் பேச்சுவார்த்தையில் இருக்கவேண்டும் என்று ரஷ்யா கோரியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் ஆஸார்பைஜான் – ஆர்மீனியப் பிரச்சனைக்குள் மூக்கை நுழைப்பது ரஷ்ய சார்பில் விரும்பப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் தாம் அந்த நாடுகளிடையே சமாதானம் ஏற்படுத்த முயல்வதற்கு ஆப்பு வைப்பதில் ஈடுபட்டு வருகிறது என்று கடந்த மாதம் ரஷ்யா சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்