அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து 25 க்குட்பட்டவர்களுக்கு கருத்தடை உறைகளை இலவசமாக்கியிருக்கிறது பிரான்ஸ்.
25 க்கு உட்பட்டவர்களுக்கு அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து கருத்தடை உறைகளை இலவசமாக வழங்கவிருப்பதாக ஜனாதிபதி மக்ரோன் அறிவித்திருக்கிறார். இளவயதினரிடையே உடலுறவுகள் மூலம் பரவும் வியாதிகளைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். வழக்கத்துக்கு மாறாக விலைவாசிகள் உயர்ந்துவிட்டிருக்கும் இச்சமயத்தில் பொருளாதார வசதியால் ஒருவர் கர்ப்பமாகுவதைத் தடுக்கவும், உடலுறவால் பாதிக்கப்படும் வியாதிகளிலிருந்து தடுக்கவும் இது உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
25 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு இலவசமாகக் கருத்தடை மாத்திரைகள் போன்றவற்றை வழங்குவது ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. அத்திட்டத்தில் ஆண்கள் இல்லாதிருப்பதாலேயே இலவச கருத்தடை உறைகள் வழங்கும் திட்டம் அமுலுக்கு வரவிருக்கிறது.
பிரான்ஸ் அரசு குழந்தைக்கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட சேவைகளில் ஒரு பகுதியை இலவசமாக வழங்கி வருகிறது. வருமானம் குறைந்தவர்கள் மருத்துவர்களைச் சந்திக்க நேரம் பெற்றுக்கொள்ள நீண்டகாலம் காத்திருக்க வேண்டும் என்ற விமர்சனம் இருந்து வருகிறது. கருச்சிதைவு செய்துகொள்வது இலவசமானது.
சாள்ஸ் ஜெ. போமன்