உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பித்தது மட்டுமன்றி 2022 ம் ஆண்டு செய்த சாதனைகள் பல.
கடந்துபோகும் 2022 பல துறைகளிலும் புதிய சாதனைகளைச் செய்திருக்கிறது. நவம்பர் 15 ம் திகதியன்று உலக மக்கள் தொகையானது 8 பில்லியன் ஆகியது. காரணம் சர்வதேச அளவில் மக்களின் சுபீட்சம், ஆரோக்கியம், மருத்துவ வெற்றிகள், உணவுத்தரம் ஆகியவை அதிகரித்திருப்பதே என்கிறது ஐ.நா வின் அறிக்கை.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர் காரணமாக எரிபொருள், உணவுப்பொருட்களின் விலைகள் இவ்வருடம் பெருமளவில் உயர்ந்து சிகரங்களைத் தொட்டிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் இவ்வருடம் பணவீக்கமானது 10.6 % தொட்டது. அதை அளவிடத் தொடங்கிய 1997 முதல் இதுவரை அவ்வளவு விலையேற்றங்களை ஐரோப்பா சந்தித்ததில்லை.
ஐரோப்பாவுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையும் 2022 இல் மிகப் பெருமளவாகும். இரண்டாம் உலகப் போரின் பின்னர் இத்தனை அதிக அகதிகளை ஐரோப்பா எதிர்கொண்டதில்லை. உக்ரேனுக்குள் மட்டும் 6,9 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் புலபெயர்ந்தார்கள். அவர்களில் உக்ரேனுக்கு வெளியே புகலிடம் தேடியவர்கள் 7 மில்லியன் ஆகும். உலகம் முழுவதிலும் 2022 இல் 100 மில்லியன் பேர் அகதிகளாகப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அது இதுவரை எந்த வருடத்தில் ஏற்பட்டதையும் விட மிக அதிகமானது.
சிறீலங்காவைப் பொறுத்தவரை ராஜபக்சே குடும்பத்தினரின் பிடியிலிருந்த ஆட்சி 2022 இல் மக்கள் போராட்டத்தின் பின்னர் கைமாறியது. விடாப்பிடியாக வீதிக்கு வந்து குரல்கொடுத்த மக்களின் எதிர்ப்பைத் தாங்கமுடியாமல் கோட்டாபாயா ராஜபக்சே நாட்டை விட்டே ஒளித்தோடும் நிலைமை ஏற்பட்டது. மேலுமொரு சாதனையாக ஒரேயொரு பாராளுமன்ற இடத்தை வைத்துக்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்கே ஆட்சியை இறுகப் பிடித்து அமர்ந்துகொண்டார்.
உலகின் வெப்பநிலை உயர்வும் 2022 இல் சாதனைச்சிகரங்களைத் தொட்டது. ஐக்கிய ராச்சியத்தில் வெப்பநிலையை அளவிடத் தொடங்கிய காலத்திலிருந்து முதல் தடவையாக 40 பாகை செல்சியஸ் வெப்ப நிலையை நாடு சந்தித்தது. ஐரோப்பாவின் பல பாகங்களும் எந்த வருடமும் காணாத அதிக வெப்பநிலையை 2022 இல் எதிர்கொண்டது.
இறப்புகளைப் பொறுத்தவரை பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத், ஓய்வுபெற்ற முன்னாள் பாப்பாண்டவர் பெனடிக்ட், உலகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் பெலே, நடிகர் சிட்னி பொய்ட்டியர், நடிகை ஒலிவியா நியூட்டன் ஜோன், ரே லியொட்டா, ரொக் பாடகர் மீட் லோவ், பப்பி லஹரி, லதா மங்கேஷ்கர், பிரதாப் போத்தன், பிர்ஜு மஹாராஜ், சுலோச்சனா சாவன், நய்யாரா நூர் ஆகியோரையும் உலகம் இழந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்