போலியான தலதா மாளிகையொன்று குருநாகலில் கட்டப்பட்டு வருகிறதா?
சிறீலங்கா ஜனாதிபதிக்கு, மள்வத்து, அஸ்கிரியா பகுதி மகாநாயக்க தேரோக்கள் எழுதியிருக்கும் கடிதமொன்றில் குருநாகலில் போலியாக ஒரு தலதா மாளிகை கட்டப்பட்டு வருவதாகவும் அதற்காகப் பலரிடமிருந்து பணம், நகைகள் பெறப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதையொட்டி உடனடியாக விசாரணை செய்யும்படி ரணில் விக்கிரமசிங்கே நாட்டின் பொலீஸ் மா அதிபரிடம் உத்தரவிட்டிருக்கிறார்.
குருநாகலில், பொத்துஹர என்ற பகுதியில் அந்தக் கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்குப் பின்னாலிருப்பவர்களில் சேபால் அமரசிங்க, ஜனக சேனாதிபதி ஆகியோர் முக்கியமானவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதையடுத்து அவ்விருவர் மீதும் நாட்டின் குற்றவியல் விசாரணை அமைப்பு தனது விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது.
நாத்திக எழுத்தாளரும் விமர்சகருமான சேபால் அமரசிங்க சமீபத்தில் புத்தரின் தந்தம் பற்றியும் சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிட்டிருப்பதாகவும் விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. போலியான தலதா மாளிகை கட்டுதல், புத்தரின் தந்தம் பற்றிய சர்ச்சை ஆகியவை புத்த சமயத்தின் புனிதத்தை இழிவுபடுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டு அமரசிங்க இன்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
தனது யூடியூப் நிகழ்ச்சிகள் மூலம் அமரசிங்க புத்தரின் தந்தத்தைப் பற்றிக் கேள்விகளை எழுப்பி விமர்சித்திருப்பது பாராளுமன்றத்திலும் சாடல்களுக்கு உருவாகியிருக்கிறது.
“வெவ்வேறு அரசியல் கோட்பாடுகளைக் கொண்ட தாடிவைத்த முட்டாள்கள் சமூகவலைத்தளங்களில் சமூகவலைத்தளங்களில் புத்தரின் புனித தந்தம் பற்றித் தம்மிஷ்டப்படி பேசி அவமானப்படுத்துகிறார்கள். புத்தரின் புனித தந்தம் பற்றி நம்பாதவர்களைப் பற்றி எமக்குக் கரிசனையில்லை. ஆனால், அவர்கள் அதை அவமானப்படுத்தி விசுவாசிகளின் மனதைப் புண்படுத்துவதை அனுமதிக்க இயலாது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,” என்று தேசியவாதியான விமல் வீரவன்ஸ நாடாளுமன்றத்தில் அறைகூவினார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சேயும் வீரவன்ஸவின் கருத்தை ஆதரித்து, புத்த மதத்தினரை உலகில் எவரும் அவமதிப்பதோ, மனம் புண்படச் செய்வதோ அனுமதிக்கப்படலாகாது என்றார்.
சாள்ஸ் ஜெ. போமன்