அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்கள் பஸ்ராவில் ஆரம்பமாகின்றன.
கடந்த பல வருடங்களாகவே போர், உள்நாட்டு அரசியல்பிளவுகள் ஆகியவற்றால் சிதறுண்டிருக்கும் ஈராக்கில் அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்கள் ஜனவரி 06 திகதியன்று ஆரம்பமாகின்றன. நாட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும், பல்லாயிரக்கணக்கான ஈராக்கிய உதைபந்தாட்ட ரசிகர்கள் அந்த மோதல்களைக் காண பஸ்ரா நகரின் தேசிய அரங்கத்தை முற்றுக்கையிட்டிருக்கிறார்கள். 1970 முதல் அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்கள் நடந்துவருகின்றன.
25 வது தடவையாக நடக்கும் இந்தப் போட்டியின் முதலாவது மோதலில் ஈராக்கும் ஓமானும் சந்தித்துக்கொள்ளவிருக்கின்றன. ஆர்ஜென்ரீனாவை வென்று கத்தாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சவூதி அரேபியாவின் அணி அதற்கடுத்த மோதலில் யேமன் தேசிய அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
அரசியல் காரணங்களுக்காக 1992 – 2004 காலப்பகுதியில் ஈராக் அந்தக் கோப்பைக்கான மோதல்களில் பங்குபற்ற அனுமதிக்கப்படவில்லை. ஆயினும் 1976 இல் முதல் தடவையாக அப்போட்டிகளில் பங்குபற்ற ஆரம்பித்த ஈராக் அணி இதுவரை மூன்று தடவைகள் வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியிருக்கிறது. மேலும் இரண்டு தடவைகள் இரண்டாவது இடத்தைப் பெற்றது.
குவெய்த், எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரேய்ன் ஆகியவை மோதல்களில் பங்குபற்றும் மற்றைய நான்கு நாடுகளாகும். எட்டு நாடுகளின் அணிகளும் முதல் கட்ட மோதல்களுக்காக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு குழுக்களில் முதலிரண்டு இடத்தைப் பிடிப்பவர்களும் அரையிறுதி மோதல்களில் பங்குபற்றுவார்கள். ஜனவரி 19 ம் திகதியன்று மோதல்கள் நிறைவடையும்.
சாள்ஸ் ஜெ. போமன்