ஈராக்கிய கொவிட் 19 மருத்துவமனைத் தீவிபத்தின் விளைவுகள் அதற்குப் பொறுப்பான அமைச்சரைப் பதவி விலகக் கோருகின்றன.

இதுவரை வெளியாகியிருக்கும் விபரங்களின்படி பாக்தாத் கொவிட் 19 மருத்துவமனைத் தீவிபத்தினால் இறந்தவர்கள் தொகை 82. அவர்கள் தவிர அங்கே சிகிச்சை பெற்றுவந்த மேலும் நூற்றுக்கும் அதிகமான நோயாளிகள் காயப்பட்டிருக்கிறார்கள். மக்களின் குரல் தமது நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சரைப் பதவி விலகவேண்டுமென்று கோருகின்றன. பிரதம மந்திரி அவரைப் பதவியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறார், விசாரணைகளுக்காக.

அந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் பாவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பிராணவாயுக் கொள்கலனொன்று கவனமில்லாமல் கையாளப்பட்டு வெடித்ததே நேற்று நடந்த அந்தத் தீவிபத்துக்கான முதல் பொறி என்று தெரியவந்திருக்கிறது. நாட்டின் பிரதமர் ஏற்கனவே மருத்துவ சேவைக்குப் பொறுப்பான உயரதிகாரிகள் சிலரைப் பதவியிலிருந்து உதைத்துத் தள்ளியிருக்கிறார். 

மிகவும் மோசமாகக் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கவனிக்கப்பட்டு வந்த மருத்துவமனையின் பிரிவிலேயே அந்தப் பிராணவாயு வெடித்திருக்கிறது. எரியும் நெருப்பிலிருந்து தப்புவதற்காகப் பலர் மாடியிலிருந்து குதித்திருந்திருக்கிறார்கள். விபத்து ஏற்பட்டவுடன் வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்ட 28 பேர் சுவாசிக்க இயலாமல் இறந்திருக்கிறார்கள்.

ஏற்பட்ட விபத்துக்குக் காரணமானவர்களைப் பற்றி முஸ்தபா அல் காதிமி “இப்படியான கவலையீனங்களைத் தெரியாமல் செய்த தவறுகளென்று தட்டிக் கழிக்க இயலாது. இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்,” என்று குறிப்பிட்டிருக்கிறார். சுமார் 200 நோயாளிகள் மட்டுமே அந்த மருத்துவமனையிலிருந்து வேறிடத்துக்கு அகற்றப்பட்டுத் தப்பியிருக்கிறார்கள்.

ஈராக்கில் வேகமாகப் பரவிவரும் கொரோனாத் தொற்று இதுவரை 15,200 பேரைக் கொன்றிருக்கிறது. ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தினசரி 8,000 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக உத்தியோகபூர்வமான தரவுகள் குறிப்பிடுகின்றன. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *