பெலாரூஸ் தலைநகருக்கு பயணிகளுடன் பறப்பதை நிறுத்திக்கொண்டது ஈராக்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனது நாட்டை ஓரங்கட்டுவதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் பெலாரூஸ் நாட்டின் தலைமை தமது நாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையினூடாக அகதிகள் நுழைவதற்கு வழி செய்து கொடுத்திருக்கிறது. அதனால் அவ்வெல்லையிலிருக்கும் லித்தவேனியா நாட்டுக்குள் அகதிகள் நுழைந்து வருதல் பல நூறு மடங்குகளால் அதிகரித்திருக்கிறது.

https://vetrinadai.com/news/belarus-sent-refugees-eu-border/

இதுவரை பெலாரூஸ் சர்வாதிகாரி லுகஷெங்கோவின் கொடூர ஆட்சியிலிருந்து தப்பியோடுகிறவர்களுக்குத் திறந்திருந்த லித்தவேனியாவின் எல்லை அதனால் மூடப்பட்டுவிட்டது. லுகஷெங்கோ திட்டமிட்டே பல்லாயிரக்கணக்கான அகதிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அந்த எல்லையினூடாக நுழைய அனுமதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டி வருகிறது. 

கோடைகாலத்தில் மட்டுமே லித்தவேனியாவின் எல்லைக்குள் சுமார் 4,000 அகதிகள் நுழைந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஈராக்கியர்களாகும். 2020 ம் ஆண்டு முழுவதும் லித்தவேனியாவுக்குள் நுழைந்த அகதிகளின் எண்ணிக்கை 81 மட்டுமே. சுமார் 2.8 மில்லியன் மக்கள் குடித்தொகையுள்ள லித்தவேனியாவுக்கு இந்தத் தொகை அகதிகள் மிகப்பெரும் சோதனையாகிவிட்டது.

ஈராக்கிலிருந்து பெலாரூஸின் தலை நகர் மட்டுமன்றி மற்றைய நகர்களுக்கும் பயணிகளை ஏற்றிவந்த Iraqi Airways, Fly Baghdad ஆகிய இரண்டு விமான நிறுவனங்களையும் உடனடியாகத் தமது பயணிகள் சேவைவை அந்த நாட்டுக்கு நிறுத்தும்படி ஈராக்கிய வான்வெளிக் கட்டுப்பாட்டு திணைக்களம் அறிவித்திருக்கிறது. ஈராக்கிய வெளிவிவகார அமைச்சர் தமது நாட்டு மக்கள் கடத்தல்காரர்களுக்குப் பலியாவதை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறார்.

அவ்விமான நிறுவனங்கள் பெலாரூஸின் தலைநகருக்கு வெறும் விமானத்துடன் சென்று அங்கிருந்து திரும்பி வர விரும்புபவர்களைக் கொண்டுவர ஒழுங்குசெய்யப்பட்டிருப்பதாக ஈராக் அறிவிக்கிறது. லித்தவேனியாவிலிருந்து முதல் கட்டமாக சுமார் 300 ஈராக்கியர் நாடு திரும்ப விரும்புவதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *