அறுபது வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவை சீனாவின் மக்கள் தொகை குறைந்திருக்கிறது.
2022 ம் ஆண்டின் கடைசியில் சீனாவின் மக்கள் தொகை 1.4 பில்லியன் என்று நாட்டின் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது. நாட்டின் மக்கள் தொகையானது சுமார் 60 வருடங்களுக்குப் பின்னர் முதலாவது தடவையாகக் குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வருடத்தின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது 850,000 ஆல் குறைந்திருக்கிறது.
மக்கள் தொகை குறைதல், பிள்ளைப்பேறு குறைதல் மற்றும் மொத்த சனத்தொகையில் வயதானவர்களின் பங்கு அதிகரித்து வருவதும் சீனாவுக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்து வருகிறது. குழந்தைப் பெறுதல் குறையும் அதே சமயம் 60 வயதுக்கு அதிகமானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது ஓய்வுபெற்றவர்களுக்காக அரசின் செலவை அதிகரிக்கும் அதே சமயம் எதிர்காலத்தில் சீனாவின் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையவிருக்கிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2021 இல் சீனாவில் 10.6 மில்லியன் குழந்தைகள் பிறந்தனர். அதன் மூலம் ஆறு வருடங்களாகத் தொடர்ந்து சீனாவில் பிள்ளைபெறுதல் குறைந்திருக்கிறது. 2022 வருடத்தில் பிறந்த பிள்ளைகளின் எண்ணிக்கை விபரங்கள் மேலுமொரு வாரத்தில் வெளியிடப்படும். அந்த எண்ணிக்கை மேலும் குறைந்திருக்கும் என்றே ஊகிக்கப்படுகிறது.
சீனாவின் பிறப்பு விகிதம் 2022 இல் 1,000 பேருக்கு 6.77 ஆக இருந்தது, 2021 இல் அது 7.52 ஆகும். நாடு முழுவதும் இறப்பு விகிதம் கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 7.37 ஆக இருந்தது, இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1,000 பேருக்கு 0.6 எதிர்மறையாக [குறைவாக] உள்ளது.
இறந்தவர்களின் எண்ணிக்கை 10.1 மில்லியன் பேராகும். 2022 இல் இறந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாகும். 1949 ம் ஆண்டு சீனா நிறுவப்பட்ட பின்னர் 1961 இல் தான் முதல் தடவையாக நாட்டின் மக்கள் தொகை சுருங்கியிருந்தது. அச்சமயத்தில் நாட்டின் தலைவராக இருந்த மாசேதுங்கின் கலாச்சாரப் புரட்சியின் விளைவாக நாட்டில் ஏற்பட்ட பஞ்சம், பட்டிணி ஆகியவையே அதன் காரணம் என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்