இஸ்ராயேலில் தமது சமூகம் வாழும் பகுதிகளில் “கோஷர்” தொலைபேசிகளை மட்டுமே விற்கலாமென்று போராடும் ஹெராடி யூதர்கள்.
அரசியல் அவதானிகள் பலரும் எச்சரித்தது போலவே இஸ்ராயேலில் பெஞ்சமின் நத்தான்யாஹூ புதியதாக உண்டாக்கியிருக்கும் யூத தேசியவாத, பழமைவாத அரசு பல சச்சரவுகளை நாட்டில் உண்டாக்கியிருக்கிறது. படு பழமைவாதிகளான ஹெராடி யூதர்கள் தாம் செறிந்து வாழும் ஜெருசலேமின் மியா ஷியரீம் பகுதியில் “கோஷர்” தொலைபேசிகள் மட்டுமே விற்கவேண்டுமென்று மிரட்டி வருகிறார்கள். சாதாரண தொலைபேசிகளையும் விற்கும் கடைகளை அவர்கள் அடித்து நொறுக்குகிறார்கள். அதனால் அந்தக் கும்பலுக்கும் இஸ்ராயேல் பொலீசுக்கும் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது.
யூதப் படு பழமைவாதிகளான ஹெராடி யூதர்கள் தமக்குள் தனித்தனி மதத் தலைமை, கோட்பாடுகளுடன் வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்திருக்கிறார்கள். அவர்கள் மேலை நாட்டுக் கலாச்சாரத்தால் தாம் ‘நச்சுப்படுத்தப்படாமல்” சுத்தமாக இருக்கவேண்டும் என்று வெவ்வேறு அளவில் செயற்படுகிறார்கள். தமக்குள் பொதுவாக இருக்கும் படுபழமைவாத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒன்றிணைந்தும் செயற்படுகிறார்கள். நாட்டின் சனத்தொகையில் அவர்கள் சுமார் 12.6 விகிதமாகும்.
தமது சமூகம் “கோஷர்” தொலைபேசிகள் மட்டுமே பாவிக்கலாம் என்கிறார்கள். அவைகளில் இணையத்தொடர்போ, கமராவோ இருக்கலாகாது. இன்னொருவருடம் குரல் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளலாம். அதுவும் ஹெராடிய மதத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்களிலிருந்து வரும் அழைப்புகளில் மட்டுமே பேசலாம்.
கடந்த ஏப்ரலில் அச்சமயத்துத் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சர் ஹெராடி யூதர்கள் தமது மதத் தலைவர்களுக்குத் தெரியாமல் கோஷர் தொலைபேசியைச் சாதாரணமான தொலைபேசிகள் மூலம் பெறக்கூடிய சேவைகளைப் பெறும்படியாக சட்டத்திருத்தத்தை அமுல்படுத்தினார். அந்த மாற்றமானது ஹெராடி யூதர்களுக்கும் இஸ்ராயேலின் எஞ்சிய சமூகத்துக்குமிடையே உரசலை அதிகப்படுத்தியிருக்கிறது. ஹெராடி யூத மதத் தலைவர்கள் தமது சமூகத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சாத்தியம் இல்லாமல் போய்விட்டதால் பெரிதும் கோபமடைந்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்