தோற்றுப்போன ரிபப்ளிகன் கட்சிக்காரர் எதிர்க்கட்சியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தாரா?
டெமொகிரடிக் கட்சி அரசியல்வாதிகள் வீடுகளை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, ரிபப்ளிகன் கட்சிக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். நவம்பர் மாத ஆரம்பத்தில் அமெரிக்காவில் நடந்த இடைத்தவணைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சொலமன் பின்யா தான் சமீபகாலத்தில் நடந்த துப்பாக்கிச்சூடுகளுக்குக் காரணமானவர் என்று பொலீசார் தரப்பில் குறிப்பிடப்படுகிறது.
தான் போட்டியிட்ட நியூ மெக்ஸிகோவின் தொகுதியொன்றில் சுமார் 3,600 வாக்குகளால் தோல்வியுற்ற பின்யா தேர்தல் வெற்றி தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதாக மாநகர அதிகாரத்தினரைக் குற்றஞ்சாட்டினார். அத்துடன் தேர்தல் அதிகாரத்துக்கு எதிரான கருத்துக்களையும், தேர்தல் முறைக்கு எதிரான கதைகளையும் பரப்பிவந்தார்.
டிசம்பர், ஜனவரி மாதங்களில் அப்பிராந்தியத்தில் பல டெமொகிரடிக் கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளை நோக்கிக் காரில் வந்த ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்தத் தாக்குதல்களில் எவரும் காயப்படவோ, இறக்கவோ இல்லை. ஒரு அரசியல்வாதியின் மகளின் படுக்கையறையை நோக்கியும் துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்டிருந்தது. அதைப்பற்றி நீண்டகாலமாக விசாரணை செய்துவந்த பொலிசார் பின்யாவே குறிப்பிட்ட தாக்குதல்களை நடத்தியதகத் தம்மிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறி அவரைக் கைதுசெய்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்