சிறீலங்கா தனது கடன்களைத் திருப்ப சீனா கொடுத்திருக்கும் இரண்டு வருடக்கெடு தெளிவானதல்ல!
சிறீலங்கா தனக்குத் திருப்பிக்கொடுக்கவேண்டிய கடன் சுமார் 7.4 பில்லியன் டொலர்களுக்காக 2 வருட அவகாசத்தைச் சீனா கொடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சிறீலங்காவின் வெளிநாட்டுக் கடன்களில் சுமார் 20 விகிதமானவை சீனாவிடமே பெறப்பட்டிருக்கின்றன. பொருளாதாரச் சிக்கல்களால் முடமாகியிருக்கும் நாடு மீண்டும் தலையெடுக்கவேண்டுமானால் தற்போதைய கடன்களின் உடமையாளர்கள் தமது கடன்களைத் திரும்பப்பெற ஒரு இடைவெளி கொடுக்கவேண்டுமென்ற நிலையில் சீனாவின் இந்தச் செய்தி ஆறுதலானதாகும். ஆயினும் சீனாவின் EXIM வங்கி கொடுத்திருக்கும் விபரங்கள் தெளிவானவையாக இல்லையென்றும் அவ்விபரங்கள் சிறீலங்கா சர்வதேச நாணய நிதியிடம் கோரியிருக்கும் கடனைப் பெற்றுக்கொள்ளப் போதாதவையாக இருக்கிறது என்று பொருளாதார அமைச்சிலிருந்து பெயர் வெளியிடாத உத்தியோகத்தர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இடைக்கால கடன் உதவியாக சுமார் 2.9 பில்லியன் டொலர்களைச் சிறீலங்கா அரசு உலக வங்கி, சர்வதேச நாணய நிதி ஆகியவற்றிடம் கோரியிருக்கிறது. அந்தக் கடனைச் சிறீலங்காவுக்குக் கொடுப்பதற்காக முன்வைக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் பலவாகும். அவைகளில் முக்கியமானவை சிறீலங்காவுக்கு ஏற்கனவே கடன் கொடுத்திருப்பவர்கள் தமது கடன்களைத் திரும்பப் பெறுவதற்காகச் சிறீலங்காவுக்கு மேலதிக அவகாசம் கொடுக்கவேண்டும். அதற்கான பேச்சுவார்த்தைகளை அந்தந்த நாடுகளுடன் சிறீலங்கா செய்துகொள்ளவேண்டும்.
சிறீலங்காவுக்குக் கடன் கொடுத்திருக்கும் மேலுமொரு முக்கிய நாடான இந்தியா ஏற்கனவே தனது சம்மதத்தைத் தெரிவித்திருக்கிறது, அதற்கான நிபந்தனைகளுடன். ஜப்பான், ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்தும் சாதகமான செய்திகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
சர்வதேச நாணய நிதியின் கடனுக்கான மற்றைய நிபந்தனைகளில் நாட்டில் லஞ்ச ஊழல்களை ஒழித்தல், பொதுத்துறை ஊழியர்கள், இராணுவத்தினர்கள் எண்ணிக்கை குறைத்தல், விற்பனை வரி, வருமான வரி போன்றவைகளை அறிமுகப்படுத்துதல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. வருமான வரி விதித்தல் மேலுமொரு எதிர்ப்பை அரசுக்கு உருவாக்கியிருப்பதாகத் தெரிகிறது.
அரசின் செலவுகளைக் குறைத்து வருமான வரிகளை அறிமுகப்படுத்தியிருப்பதை எதிர்த்துக் கல்வித்துறை ஊழியர்கள், மற்றும் தொழிற்சங்கங்கள் கொழும்பில் கூடிக் குரலெழுப்பினார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்